Thursday, February 9, 2012

சிறுதாவூரில் உள்ள முதல்வர் ஜெயலலிதா பங்களா எதிரில்: மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்!

Thursday, February 09, 2012
திருப்போரூர்::சிறுதாவூரில் முதல்வர் ஜெயலலிதா பங்களா எதிரே மார்க்சிய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் நாற்று நடும் போராட்டம் நடத்த வந்தனர். இதற்கு எதிரப்பு தெரிவித்த அதிகாரிகளை கண்டித்து நடந்த சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருப்போரூர் அருகே கருங்குழிபள்ளம் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசுக்கு சொந்தமான 108 ஏக்கர் நிலம், தலா 2 ஏக்கர் வீதம் அரிஜன நில குடியேற்ற சங்க உறுப்பினர்களுக்கு 1963ல் வழங்கப்பட்டது. 1967ல் ஏற்பட்ட புயல், வெள்ள சேதம் காரணமாக கருங்குழி கிராமத்தில் வசித்த மக்கள், பக்கத்து கிராமத்துக்கு சென்று விட்டனர். வருவாய் துறை பதிவேட்டில், அந்த நிலம் அனாதினம் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த நிலத்தை மீட்டு, தலித் மக்களுக்கு பட்டா போட்டு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2010ல் கோரிக்கை வைத்து, 2 முறை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசின் கவனத்தை ஈர்க்க அப்பகுதியில் நாற்று நடும் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயலலிதா தங்கும் பங்களா எதிரே நேற்று போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இரு கட்சிகளையும் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கிருந்த போலீசார், அதற்கு தடை விதித்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர். 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம், மற்றும் கல்வெட்டுகளையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரு கட்சியினரும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்லப்பா, வட்டாட்சியர் வெங்கடேசன், காஞ்சிபுரம் கூடுதல் எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் அங்கு வந்தனர் மறியல் செய்தவர்களிடம், இடிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் கொடி கம்பங்களை கட்டித்தருவதாக உறுதி கூறினர். ஆனால் பிரச்னைக்குரிய இடத்தில் தங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதையடுத்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பீமாராவ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், துணை செயலாளர் கிட்டு, நிலம் மீட்பு சங்க சட்ட ஆலோசகர் பழனிவேல், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மோகனன், கண்ணன், சங்கர், மனோகரன், சாமுவேல்ராஜ், உட்பட ஏராளமானோர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது.

இதையடுத்து கோட்டாட்சியர் செல்லப்பா, கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் உறுதி அளித்தார். இதை ஏற்று கலைந்து சென்றனர். இதனால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் வரை பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

No comments:

Post a Comment