Sunday, February 12, 2012

ராவணன் ஆயில் மில்லில் போலீஸ் திடீர் சோதனை!

Sunday, February 12, 2012
கோவை::கான்ட்ராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராவணனின் ஆயில் மில்லில் போலீசார் சோதனை நடத்தினர். கோவை மாவட்டம் சிறுமுகை கிச்சகத்தியூரை சேர்ந்தவர் ரவிகுமார். கான்ட்ராக்டர். இவரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக கடந்த மாதம் 26ம் தேதி சசிகலாவின் உறவினர் ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க மேட்டுப்பாளையும் மாஜிஸ்திரேட் ரபீக் அனுமதி அளித்தார். அதன்படி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து ராவணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் நேற்று மாலை மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் ரபீக் வீட்டில் இருவரையும் ஆஜர்படுத்தினர். ராவணன், மோகன் இருவரையும் வருகிற 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரபீக் உத்தரவிட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள ராகா ஆயில் மில் அலுவலகத்தில் வைத்து தன்னை ராவணனும், அவரது உதவியாளர்களும் மிரட்டியதாக ரவிக்குமார் புகாரில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் நேற்று மதியம் ராவணனை பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி சக்திவேல் தலைமையிலான போலீசார் திருச்சி ரோட்டில் உள்ள ராகா ஆயில் மில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் சோதனை நடத்தினர். 35 நிமிடங்கள் விசாரணை நடத்திய போலீசார் திரும்ப அழைத்து சென்றனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment