Wednesday,February,08,2012மதுரை::மதுரையில் இன்று காலை நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு திரும்பிய ரவுடி காவல்நிலையம் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகு என்ற நாகேந்திரன்(31). ஒரு வழக்கு தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு இன்று காலை 10 மணியளவில் பைக்கில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
காவல் நிலையம் அருகில் மெயின் ரோட்டிலிருந்து பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பை நெருங்கிய போது திடீரென 2 பைக்குகளில் வந்த 4 பேர் நாகேந்திரன் ஓட்டி வந்த பைக்கை இடித்துத் தள்ளினர். இதில் நடுரோட்டில் நாகேந்திரன் தடுமாறி விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள் நால்வரும் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நாகேந்திரனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் அதே இடத்தில் நாகேந்திரன் இறந்தார்.
பரபரப்பான காலை நேரத்தில் மக்கள் நெருக்கம் உள்ள ரோட்டில், காவல்நிலையம் அருகிலேயே இந்த துணிகர சம்பவம் நடந்திருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment