Pages

Wednesday, February 8, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : மூத்த அமைச்சர்கள் மட்டும் உள்ளூரில் தங்க ஏற்பாடு!

Wednesday,February,08,2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதில் இடம் பெற்றுள்ள 26 அமைச்சர்கள் உள்பட 34 பேருக்கு வீடு பார்க்க சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகிகள்அலைந்து வருகின்றனர். சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 3 ஒன்றியங்களும், சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளும், திருவேங்கடம் பேரூராட்சியும் உள்ளன. இதில் குருவிகுளம் ஒன்றியத்தில் 44 கிராம பஞ்சாயத்துக்களும், மேலநீலிதநல்லூரில் 25 கிராம பஞ்சாயத்துக்களும், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகளும் உள்ளன.

தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள 34 பேருக்கு இந்தப் பகுதிகள் பிரித்து வழங்கப்படும் நிலையில் ஒரு ஒன்றியத்துக்கு 8 அமைச்சர்களுக்கு குறையாமல் வலம் வருவர். தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் கிராமங்கள் தோறும் அமைச்சர்கள் பிரசாரம் செய்வார்கள். இத்தனை அமைச்சர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியிலேயே தங்குவதற்கு வீடுகள் கிடைப்பதும் கஷ்டம். மேலும் தொகுதிக்குள் அனைத்து அமைச்சர்களும் தங்குவது பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதையும் தலைமை நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ., செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் மட்டும் சங்கரன்கோவிலில் தங்கி விட்டு மற்ற அமைச்சர்களுக்கு சங்கரன்கோவில் தொகுதிக்கு அருகே உள்ள ராஜபாளையம், கோவில்பட்டி, தென்காசி மற்றும் நெல்லையில் கட்சி நிர்வாகிகள் வீடுகள், பங்களாக்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்ததும் இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்க கூடிய திமுக, மதிமுக, தேமுதிக கட்சி நிர்வாகிகளும் சங்கரன்கோவில் மற்றும் வெளியூர்களில் தங்கும் பட்சத்தில் வீடுகள், பங்களாக்களை தேட இன்னும் நெருக்கடி ஏற்படும். இதனால் வீட்டு புரோக்கர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் இடைதேர்தல்: அதிமுக பணிக்குழுவில் 34 பேர் பொறுப்பாளர்களாக நியமனம்!

சென்னை::அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், வளர்மதி, சி.வி.சண்முகம், செ.தாமோதரன், செல்லூர் கே.ராஜு, பச்சைமால், எடப்பாடி கே.பழனிசாமி, ஆர்.காமராஜ், எம்.சி.சம்பத், கே.வி.ராமலிங்கம், சின்னையா, தங்கமணி, டாக்டர் எஸ்.சுந்தரராஜ், செந்தூர்பாண்டியன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா, சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, என்.ஆர்.சிவபதி, ராஜேந்திர பாலாஜி, செல்லப்பாண்டியன், டாக்டர் வி.எஸ்.விஜய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் டாக்டர் பி.எச்.பாண்டியன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி, மாணவர் அணி செயலாளர் எஸ். சரவணபெருமாள், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ.அன்வர்ராஜா, புரட்சித்தலைவி பேரவை செயலாளர் அன்பழகன், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ராஜலட்சுமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment