Saturday, February 11, 2012

ராஜினாமா செய்கிறார் விகே சிங்: புதிய ராணுவ தளபதியாக பிக்ரம் சிங்?

Saturday, February 11, 2012
டெல்லி::அரசுக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில் பின்னடைவைச் சந்தித்த ராணுவ தளபதி வி கே சிங், ஓய்வு தேதிக்கு முன்பே ராஜினாமா செய்வார் என தெரிகிறது. புதிய ராணுவ தளபதியாக பிக்ரம் சிங் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தான் பிறந்த ஆண்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் தலைமை தளபதி வி.கே.சிங், ஜெய்பூரில் தமது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.

தலைமை தளபதி பொறுப்பில் தொடர்வதா? ராஜினாமா செய்வதா என அவர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் ராணுவ தலைமை தளபதி ராஜினாமா செய்வது சிக்கலை உருவாக்கும் என்பதாலேயே உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மத்திய அரசும் வி.கே.சிங்கின் பணியை பாராட்டும் விதமாகவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்ரம் சிங்?

ஒரு வேளை ராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி.கே.சிங் தனது ஓய்வு தேதியான மே 31-அன்று முறைப்படி ஓய்வு பெற்றால், புதிய தலைமை தளபதியாக ஜெனரல் பிக்ரம்சிங்கை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்பே விகே சிங் ராஜினாமா செய்தாலும், அதை எதிர்நோக்க அரசு தயாராகிவிட்டது.

கிழக்கு மண்டல தலைமை தளபதியாக லெப்டினட் ஜெனரல் பிக்ரம்சிங் தற்போது பணியாற்றி வருகிறார்.

பிக்ரம்சிங் நியமனம் தொடர்பான அறிவிப்பு அடுத்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

தற்போதைய தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டு 1950 என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால் அவர் இந்த ஆண்டு மே 31-ந் தேதி ஓய்வு பெற வேண்டும். இதனால் ஜூன்1-ந் தேதி புதிய தலைமை தளபதி பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

பிக்ரம்சிங்கைப் போல் ராணுவ தலைமை தளபதி பொறுப்புக்கு மேற்கு மண்டல தளபதி லெப்.ஜெனரல் சங்கர் கோஷ் பெயரும் அடிபடுகிறது.

No comments:

Post a Comment