Pages

Sunday, February 5, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு முயற்சி: புதிய நிபுணர் குழு அமைக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு!

Sunday, February 05, 2012
சென்னை::கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்களின் அச்சங்கள் மற்றும் உணர்வுகளை அறிய, மாநில அரசின் சார்பில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு அறிக்கை அடிப்படையில் மாநில அரசு, மேல் நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை அடுத்து, கூடங்குளம் பிரச்னையில் பல மாதங்களாக நீடிக்கும் இழு பறிக்கு விடிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, கவர்னர் உரையில் குறிப்பிடவில்லை என, உறுப்பினர்கள் பேசினர். கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கும் மத்தியக் குழுவின் இறுதிக் கூட்டம், கடந்த 31ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், கவர்னர் உரையில் எதையும் தெரிவிப்பது சரியாக அமையாது என்ற காரணத்தால், எதுவும் தெரிவிக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள், 95சதவீதம் முடிந்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் முதல், அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இந்த அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற, அந்தப் பகுதி மக்களின் அச்சத்தை நீக்கிய பின்னரே, இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். அதுவரை திட்டப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, பிரதமருக்கு நான் கேட்டுக் கொண்டதுடன், தமிழக அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மக்களின் அச்சம் தீர்க்க, மத்திய அரசால், 15 நிபுணர்கள் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, அணுமின் நிலைய எதிர்ப்பு குழு சார்பில், மூன்று பேர் நியமிக்கப்பட்டனர். மாநில அரசின் சார்பில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், எஸ்.பி., குழுவில் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் கூட்டம், கடந்த நவ., 8, 18 மற்றும் டிசம்பர் 15 ஆகிய நாட்களில் நடந்தது. இதில், அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினரால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, வல்லுனர் குழு பதில் அளித்ததுடன், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என, 77 பக்க அறிக்கையையும் அளித்தது.

இந்நிலையில், வல்லுனர் குழுவின் இறுதிக் கூட்டம், ஜனவரி 31ல் நடந்தது. இக்கூட்டத்தில், அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் சார்பிலான மூன்று பிரதிநிதிகளில், ஒருவர் மட்டும் பங்கேற்றார். அப்போது, வல்லுனர் குழு ஒரு அறிக்கை அளித்ததுடன், தங்கள் பணி முடிவுற்றதாக அறிவித்தது. இச்சூழலில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து, மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும். இந்த குழு, தன் அறிக்கையை அரசுக்கு விரைந்து அளிக்கும். அந்த அறிக்கை அடிப்படையில், மாநில அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக,

மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, இந்த அரசு தொய்வின்றி ஆற்றும். மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விஞ்ஞானிகளை நியமிக்க கோரிக்கை: மாநில அரசு நியமிக்க உள்ள நிபுணர் குழுவில், அணு உலை எதிர்ப்பாளர்களையும் சேர்க்க முயற்சிப்பதால், நடுநிலையான விஞ்ஞானிகளை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அணு உலைகளை மூடியே தீர வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் செயல்படும் போராட்டக் குழுவினர் எத்தகைய பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தங்கள் நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எனவே, மக்களின் அச்சத்தை போக்குவதற்கு தமிழக அரசு நியமிக்க உள்ள நிபுணர் குழுவினரின் செயல்பாடுகள் உதவி புரிவதாக இருக்கும்.
மேலும், கூடங்குளம் மக்களின் உணர்வுகளையும் அரசுக்கு தெரிவிப்பர். தமிழக அரசு நியமிக்க உள்ள குழுவில் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அணு சக்தி துறை சார்ந்த விஞ்ஞானிகளையும், அரசு பணியின் உயர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிகளையும் நியமிக்கலாம். ஏற்கனவே இந்த பிரச்னையில் போராட்டக் குழுவினர் 28 பேர்களை கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளனர். அதில் உள்ள சிலரை இந்த குழுவிலும் சேர்க்க வைக்கவும், அணுசக்திக்கு எதிரான கருத்துடையவர்களை சேர்க்க வைக்கவும் போராட்ட குழுவினர் கோரிக்கை வைக்கின்றனர். எனவே, அணு உலை பிரச்னையில் உண்மையான நிலையை அறிய நடுநிலையானவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment