Friday, February 10, 2012சென்னை::கூடங்குளம் அணுமின்
நிலைய பாதுகாப்பு குறித்து அறிக்கை
அளிக்க, நான்கு வல்லுனர்கள்
கொண்ட குழுவை, தமிழக அரசு
அமைத்துள்ளது. வல்லுனர்களைக்
கொண்ட குழுவை அமைத்து, அட்டகாசமான முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதால், மின் வெட்டே இல்லாத, "பிரகாசமான' மாநிலமாக தமிழகம் மிளிரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அணுஉலை எதிர்ப்பாளர்களின் கூடாரம் காலியாகும் நிலையும் உருவாகும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து தற்போது நிலவி வரும் எண்ணம் மற்றும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து, அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் வல்லுனர் குழு அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது' என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், முதல்வரது உத்தரவுப்படி, நான்கு பேர் கொண்ட குழு, நேற்று அமைக்கப் பட்டுள்ளது.
தலைமைச் செயலர் தேவேந்திரநாத் பிறப்பித்த உத்தரவு:
* பேராசிரியர் எம்.ஆர்.சீனிவாசன், முன்னாள் தலைவர், அணுமின் சக்தி கழகம்.
* டி.அறிவு ஒளி - பேராசிரியர், இயற்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம்.
* எஸ்.இனியன் - பேராசிரியர் மற்றும் இயக்குனர், எரிசக்தி ஆய்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
* எல்.என்.விஜயராகவன், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு). வல்லுனர் குழுவின் அமைப்பாளராக, இனியன் செயல்படுவார். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரும், அணுஉலை பாதுகாப்பு, அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் என்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலத் தேவையையும்,
கூடங்குளம் அணு உலைக்கு அருகே வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், துல்லியமாக விளக்குவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கி, தமிழகம், "பிரகாசிக்கும்' நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டக் குழுவினர் அதிர்ச்சி: "தமிழக அரசு, புதிதாக நிபுணர் குழு அமைத்தால், வரவேற்போம்' என, மொட்டையடித்து அறிவித்த உதயகுமார் மற்றும் குழுவினர், நேற்று, குழு உறுப்பினர்கள் பெயரைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். "இந்த நிபுணர் குழு அறிவிப்பு, எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. போராட்டத்தை வாபஸ் பெறுவதா, தொடர்வதா என்பது குறித்து, நெல்லையில் இன்று தெரிவிக்கிறோம்' என அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment