Thursday, February 09, 2012திருச்சி::கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் அண்ணன், தம்பியை வெட்டி கொலை செய்ய பக்கத்து நில உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகே நெய்க்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வெங்கடாசலம் (70), பங்காருசாமி (70). இருவருக்கும் அருகருகே நிலம் உள்ளது. அங்குள்ள கிணற்று நீரை இருவரும் பயன்படுத்தி வந்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டதால் கிணற்றில் தடுப்பு அமைத்து பிரிவினை செய்யப்பட்டது.
வெங்கடாசலத்துக்கு துரைசாமி (45), மோகன் (40), சந்திரசேகரன் (38) என்ற 3 மகன்கள். மோகன் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
சகோதரர்களுடன் சேர்ந்து விவசாயமும் செய்து வந்தார். பங்காருசாமிக்கு ரவி (40) என்ற ஒரேயொரு மகன். நிலத்தில் விவசாயம் செய்யவில்லை என்றாலும் கிணற்றில் தங்களுக்கான பகுதியில் உள்ள தண்ணீரை இறைத்து காலி நிலத்தில் பாய்ச்சி விடுவாராம் இதை வெங்கடாசலத்தின் மகன்கள் கண்டித்தனர். அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு மோகன் தனது வயலில் எடுத்து வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகளை பார்க்க சென்றார். அங்கு பதுங்கியிருந்த ரவி, திடீரென மோகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்தார். இதைப் பார்த்த மூதாட்டி, ஊருக்குள் சென்று சந்திரசேகரனிடம் கூறினார்.
அவர் பதறியடித்து சைக்கிளில் வயலுக்கு வந்தார். நிலத்தில் கிடந்த அண்ணனின் உடலைப் பார்த்து கதறினார். அப்போது புதரில் மறைந்திருந்த ரவி ஓடிவந்து சந்திரசேகரனையும் சரமாரியாக வெட்டினார். அவரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். சிறிது நேரத்தில் துரைசாமி, சிலருடன் அங்கு ஓடிவந்தார். கொலை வெறி அடங்காத ரவி, அவரையும் வெட்டினார். உடன் வந்திருந்தவர்கள் ரவியை பிடிக்க முயன்றனர். பயந்துபோன ரவி அங்கிருந்து தப்பியோடி விட்டார். தகவல் அறிந்ததும் லால்குடி டிஎஸ்பி இளஞ்செழியன் மற்றும் சிறுகனூர் போலீசார் வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த துரைசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர். இரட்டைக் கொலை சம்பவம் சிறுகனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைமலைநகரில் பயங்கரம் : கழுத்தை இறுக்கி சப்-கலெக்டர் கொலை!
செங்கல்பட்டு: மறைமலைநகரில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 20 பவுன் தாலி சரடு மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் சுப்பையா (75). வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி புஷ்பா, தென்காசியில் வசிக்கிறார். 2-வது மனைவி பச்சையம்மாள் (62), சப்-கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சுப்பையாவும் பச்சையம்மாளும் மறைமலைநகர் வள்ளல் ஓரி தெருவில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தனர். இன்ஜினியரான இவர்களது மகன் கார்த்திகேயன், திருமணமாகி குடும்பத்துடன் துபாயில் வசிக்கிறார். நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்ற சுப்பையா, பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். கதவு லேசாக சாத்தியிருந்தது. வீட்டில் பச்சையம்மாள் இல்லை. வீடு முழுவதும் தேடினார். அக்கம்பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
அப்போது, ஆந்திர மாநிலம் சிக்காகுளம் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் (22) என்பவர் அங்கு வந்தார். இவர், சுப்பையா புது வீடு கட்டியபோது சூபர்வைசராக வேலை பார்த்துள்ளார். சுப்பையா வசிக்கும் வீட்டின் அருகேதான் இவரும் வசிக்கிறார். வீட்டுக்கு வந்த சஞ்சய், ‘யாரை தேடுகிறீர்கள்’ என்று சுப்பையாவிடம் கேட்டுள்ளார். பச்சையம்மாளை காணவில்லை என கூறியதும் இருவரும் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். கிடைக்காததால் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் வழக்கு பதிந்து விசாரித்தார்.
இதற்கிடையே, துபாயில் வசிக்கும் மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அவசரமாக புறப்பட்டு இன்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்தார். அப்பாவுடன் சேர்ந்து அம்மாவை தேடினார். இந்நிலையில், இன்று காலை வீட்டின் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வந்தது. சந்தேகமடைந்த இருவரும் அறை கதவை திறந்து பார்த்தனர். அங்கு துணியால் மூடப்பட்ட நிலையில் பச்சையம்மாள் பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த 20 பவுன் தாலி செயின் மற்றும் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுபற்றி மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் எஸ்பி மனோகரன், செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சஞ்சய் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். நகை, பணத்துக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுப்பையா புது வீடு கட்டியபோது, மேற்பார்வையாளராக இருந்தேன். அப்போது, சுப்பையாவிடம் அதிக பணம் இருந்தது தெரிந்தது. வீடு கட்டும் வேலை முடிந்த பிறகும் அவ்வப்போது சுப்பையா வீட்டுக்கு வந்து செல்வேன். அவர்களுக்கு காய்கறி, தண்ணீர் கேன் வாங்கிக் கொடுப்பேன். நேற்று வீட்டுக்கு வந்தபோது, சுப்பையா இல்லை. பச்சையம்மாள் மட்டும் இருந்தார். அவரிடம் செலவுக்கு பணம் கேட்டேன். இல்லை என்று கூறிவிட்டார். ‘நீங்கள் அணிந்திருக்கும் தாலி சரடையாவது கொடுங்கள். அடகு வைத்து பிறகு மீட்டுக் கொடுக்கிறேன்’ என்று கேட்டேன்.
அதையும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் எனக்கு கோபம் வந்தது. தாலி செயினை பறிக்க முயன்றேன். தடுத்ததால் ஆத்திரத்தில் கீழே தள்ளி முகத்தை தரையில் அடித்தேன். பின்னர் நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினேன். சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். தாலி செயின், கம்மல், மூக்குத்தியை எடுத்துக் கொண்டேன். பீரோவை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்தேன்.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சடலத்தை இழுத்து ஸ்டோர் ரூமுக்குள் போட்டு துணியால் முடினேன். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல சுப்பையாவுடன் சேர்ந்து பச்சையம்மாளை தேடுவதுபோல் நடித்தேன். இவ்வாறு சஞ்சய் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அவருக்கு மட்டும்தான் தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாரும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment