Saturday, February 04, 2012சென்னை::சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசியதாவது:-
2006-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பை விட்டுச் சென்ற போது, தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகத்தான் இருந்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினையடுத்து, 2007-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறை; 2008-ஆம் ஆண்டு மிகவும் அதிகரித்து; நாங்கள் மீண்டும் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை அத்தகைய நிலைமை தொடர்ந்து இருந்தது.
2008-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மின் தேவை 10,909 மெகாவாட் என்று இருந்த போது, நமக்குக் கிடைக்கப்பெற்ற மின்சாரத்தின் அளவு 9,459 மெகாவாட் ஆகும். இந்த 9,459 மெகாவாட் மின்சாரத்தில், வெளிச் சந்தையிலிருந்து பெறப்பட்ட 1,200 மெகாவாட் மின்சாரமும் அடங்கும். அதாவது 1,450 மெகாவாட் என்ற அளவில் மின் பற்றாக்குறை இருந்தது.
இதனையடுத்து, 1.11.2008 முதல் மிக அதிகமான மின் கட்டுப்பாட்டு முறைகளை, முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இதன்படி, உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 விழுக்காடு மின்வெட்டும்; குறைவழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின்பயனீட்டாளர்களுக்கு 20 விழுக்காடு மின்வெட்டும்; சென்னை பெருநகரில் 1 மணி நேர மின்வெட்டும்; மாநிலத்தின் பிற பகுதிகளில் 2 மணி நேர மின்வெட்டும்; மின்சாரம் அதிகமாக பயன்படுத்தும் தருணங்களில் சென்னையை தவிர்த்து பிற இடங்களில் 1 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இது தவிர அறிவிக்கப்படாத மின்வெட்டும் பல மணி நேரம் இருந்தது. மேலும், விவசாய பயனீட்டாளர்களுக்கு 10 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்யப்படும் என்ற கட்டுப்பாட்டையும் முந்தைய தி.மு.க. அரசு விதித்தது. இது மட்டுமல்லாமல், உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் பயனீட்டாளர்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலத்திற்கு 5 விழுக்காட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் விதிக்கப்பட்டது.
பின்னர் இந்தக் கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்வு செய்யப்பட்டன. எனது தலைமையிலான அரசு பதவியேற்ற உடன், பழுதடைந்த நிலையில் இருந்த மின் நிலையங்களை உடனடியாக சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
ஜனவரி 2010 முதல் பழுதடைந்த நிலையில் இருந்த வழுதுர் எரிவாயு சுழலி மின் நிலையம், கடந்த ஜுன் மாதம் எனது அரசால் இயக்கி வைக்கப்பட்டது. இதே போன்று, பழுதடைந்திருந்த குத்தாலம் எரிவாயு சுழலி மின் நிலையம், கடந்த ஜுன் மாதம் இந்த அரசால் சரி செய்யப்பட்டது. இது தவிர, எனது அரசின் திறமையான நிர்வாக நடவடிக்கை காரணமாக, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டது.
இந்த மின் பற்றாக்குறை நடப்பாண்டு ஜுன் மாதம் முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு, அதாவது 2013 மத்தியில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று இங்கே பேசிய மாமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சத்தை தீர்க்கும் வகையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் இறுதிக் கூட்டம் 31.1.2012 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்; கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ஆளுநர் உரையில் எதையும் தெரிவிப்பது சரியாக அமையாது என்ற காரணத்தால் தான், ஆளுநர் உரையில் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதையும்; 2001 ஆம் ஆண்டு இந்திய அணுமின் கழகத்தால், பணிகள் துவக்கப்பட்டு; 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்தப்பகுதி மக்கள் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த ஒரு திட்ட செயல்பாட்டினையும் எனது அரசு ஊக்குவிக்காது என்பதால், இந்த அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அந்தப்பகுதி மக்களின் அச்சத்தை நீக்கிய பின்னரே, இந்தத் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்பட வேண்டும் என்றும்; அதுவரை இந்தத் திட்டத்தின் பணிகளை நிறுத்தி வைக்குமாறும் நான் பிரதமரை கேட்டுக் கொண்டதுடன், தமிழக அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், மத்திய அரசு கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்குவதற்காக, 15 பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழு சார்பாக மூன்று பேர் நியமிக்கப்பட்டனர்.
மாநில அரசின் சார்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரும்; திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் அந்தக் குழுவில் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் கூட்டம் 8.11.2011, 18.11.2011, 15.12.2011 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
இந்தக் கூட்டங்களில், மைய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினரால் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டன. அவர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கான பதில் அறிக்கையை வல்லுநர் குழு அளித்ததோடு மட்டுமல்லாமல், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பது குறித்த 77 பக்க அறிக்கையையும் அளித்தது.
இந்த நிலையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் இறுதிக் கூட்டம் 31.1.2012 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் சார்பாக, மூன்று பிரதிநிதிகளில் ஒருவர் மட்டும் கலந்து கொண்டுள்ளார். மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, மேலும் ஒரு அறிக்கையை அளித்ததுடன், இந்தக் குழுவின் பணி முடிவுற்றதாக அறிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும்; அப்பகுதி மக்களிடையே இது குறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து; மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் ஒரு வல்லுநர் குழு உடனடியாக நியமிக்கப்படும். இந்தக் குழு தனது அறிக்கையை அரசுக்கு விரைந்து அளிக்கும். இந்த வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசு மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை இந்த அரசு தொய்வின்றி ஆற்றும்; மக்கள் நலத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு; மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசுக்கு இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு எனது பதிலுரையை நிறைவு செய்கிறேன்.
என்னுடைய இந்தப் பதிலுரையின் மூலம், உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். எனது விளக்கங்களை, இந்தப் பதிலுரையை ஏற்றுக் கொண்டு மேதகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொடுத்துள்ள திருத்தங்களை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டு, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக, இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment