Sunday, February 5, 2012

தமிழக அரசின் வல்லுனர் குழு அறிக்கை தந்தால் கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி : மத்திய அமைச்சர் சிதம்பரம் பேச்சு!

Sunday, February 05, 2012
நெல்லை::தமிழக அரசின் வல்லுனர் குழு அறிக்கை தந்தால் கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியை துவங்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். கூடங்குளம் அணு மின்நிலையத்தை விரைவில் துவக்க வலியுறுத்தி பாளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்க அணு மின்சாரத்தை தவிர வேறு வழியே கிடையாது.

மத்திய குழு 3 கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு போராட்ட குழு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது. அணு மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தேச நலனுக்கு விரோதமானவர்கள்.
1988ல் ஒரு திட்டத்தை தொடங்கி, 1989ல் ஓப்பந்தம் போட்டோம். அப்போது இந்த உதயகுமார் எங்கே போனார்? 13,500 கோடி முதலீடு செய்தது மக்களின் பணம். போராட்டத்திற்கு பணம் தவறான வழியில¢ வந்ததா? தவறான வழியில் செலவழிக்கப்பட்டதா என்று விசாரணை நடக்கிறது. தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை பாயும். கூடங்குளம் மக்களின் அச்ச உணர்வுகளை போக்க தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்துள்ளதை வரவேற்கிறேன். மத்திய அரசு குழு தந்த 77 பக்க அறிக்கை, 4 கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தரப்பட்ட இறுதி அறிக்கை, தமிழக அரசு வல்லுனர் குழுவின் அறிக்கை ஆகிய மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறந்து செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது கால நிர்ணயம் செய்து கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

மத்திய அமைச்சர் வாசன்: கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருப்பதை பார்த்து சிலர் தப்புக்கணக்கு போடுகின்றனர். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை தீர்க்க நாம் வெளி மாநிலங்களுக்கு அதிக விலை கொடுக்கிறோம். தமிழக மின்வாரியம் பல கோடி கொடுத்து மின்சாரத்தை வாங்கி நஷ்டப்படுகிறது. எனவே இதற்கெல்லாம் தீர்வு கூடங்குளத்தில் அணுமின்நிலையம் விரைவில் இயக்கப்பட வேண்டும். சாலை, குடிநீர் வசதி, மீனவர்களுக்கான நவீன படகுகள், மறுநிவாரணம் என கடலோர மக்கள் எதை கேட்டாலும் அதை மத்திய அரசு செய்து தரும். உங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் நலன்கருதி அணுமின்நிலையம் திறக்க வழிவிடுங்கள்.

No comments:

Post a Comment