Friday, February 03, 2012சென்னை::மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே ஒரு கடை முன்பு, 2 வயது ஆண் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு போதையில் தள்ளாடியபடியே ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் நின்றிருந்தார். சிறிது நேரத்தில் அந்த குழந்தையை இறக்கி விட்டு, அப்படியே சாலையில் மல்லாந்து விட்டார். குழந்தை அழத் தொடங்கியது. அப்போது, லஸ் கார்னரில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் வந்து அந்த குழந்தையை மீட்டார். இதை அறிந்து அங்கு பொதுமக்கள் திரண்டனர்.
போதை ஆசாமி குழந்தையை கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் விசாரித்தனர். ஆனால், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. அருகில் உள்ள ஓட்டலில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அவர் மீது ஊற்றினர். அப்போதும் போதை தெளியவில்லை. பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்கவே பயந்துபோய் புலம்பியுள்ளார். துடிப்பாக இருந்த குழந்தையிடம் பெண்கள் அன்பாக பேச்சு கொடுத்தனர்.
உடனே குழந்தை அந்த ஆசாமியை தாத்தா என்று கூறினான். அவன் பெயரை கேட்டதற்கு டில்லி என்றும், பில்லி என்றும் கூறினான். பெற்றோர் அசோக், எலீசா என்றான். தாத்தா பெயரை சொல்லத் தெரியவில்லை. இரண்டு வயது குழந்தை என்பதால், தீவிரமாக விசாரிக்காமல் போதை ஆசாமியிடம் கொடுக்கக் கூடாது என்று போலீசாரிடம் பொதுமக்கள் கூறினர்.
சென்னையை பொறுத்தவரை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையே கடத்தும் சம்பவங்கள் நடக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத இந்த சூழ்நிலையில், போதையில் தூக்கி வந்து தெருவில் போட்டு விட்டானே” என்று அந்த ஆசாமி மீது மக்கள் ஆத்திரமடைந்தனர். அவரை சரமாரியாக அடித்தனர். அப்போதும் போதை தெளியாமல், எதற்கு அடிக்கிறீர்கள்? என்று கேட்டவாறே சாய்ந்தவர் நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை.
பின்னர் குழந்தையையும், பெரியவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்து மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் ஆர்.கே.தர்கா பகுதியை சேர்ந்த, குழந்தையின் பெற்றோர் மயிலாப்பூர் போலீஸ் நிலையம் வந்தனர். விசாரணைக்கு பின் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். போதையில் இருந்தவர் குழந்தையின் தாத்தா என தெரிவித்தனர். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
No comments:
Post a Comment