

Monday, February 06, 2012இலங்கை::அநுராதபுர மாவட்டத்தின் தந்திரிமலையிலுள்ள ஓயமடுவ பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்" கண்காட்சியில் முன்னாள் போராளிகளால் நிர்மாணிக்கப்பட்ட கண்காட்சிக் கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள் புனருத்தாபன மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜேந்திர ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
பொருளாதார சுதந்திரத்தை சகல மக்களும் அனுபவிக்க வைப்பது அரசின் பொறுப்பு-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
நகர்களுக்குள்ள வசதிகள் அனைத்தும் கிராமங்களுக்கும் வழங்கி இரண்டையும் நவீனமயப்படுத்தி ஒன்றிணைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரம் ஒயாமடுவயில் நேற்று முன்தினம் ‘தேசத்துக்கு மகுடம்’ அபிவிருத்திக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கிராமங்கள் நவீன மயமாக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி- அடுத்த தேசத்தின் மகுடம் கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் டி. எம். ஜயரட்ன- சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- அமைச்சர்கள்- முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் :-
இலங்கை சுதந்திரமடைந்து 64 வருடங்களின் பின்னரே நாம் அநுராதபுரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். அதனையொடியதாக ஒயாமடுவ பிரதேசத்தில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை நடத்த முடிந்துள்ளமை மகிழ்ச்சி தருகிறது.
இலங்கையின் ராஜதானியாக விளங்கிய அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். ஆயிரமாயிரம் காலம் அரசர்கள் ஆண்ட இந்த பூமி பல காரணங்களால் வீழ்ந்தது. பின்னர் ஹரிச்சந்திர போன்ற தேசிய வீரர்களால் இந்நகரம் பாதுகாக்கப்பட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை நகரங்கள் போன்று கிராமங்கள் கவனிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. கிராமங்களை பலப்படுத்துவதன் மூலம் நகரத்தை பலப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நாம்.
இலங்கை பல ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நாடாகும். எமது பொருளாதார பலத்தினாலேயே அவற்றை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது.
1818 ஆம் ஆண்டு கால கிளர்ச்சியின் போது வெல்லஸ்ஸ குளத்தின் அணை சிதைக்கப்பட்டது. அதன்போது பல உயிர்கள் பலியாகின.
நாம் 2005 ஆம் அண்டு மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் மூலம் கிராமங்களைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்தோம். விவசாயத் துறையை முன்னேற்ற வேண்டிய அவசியமும் பொறுப்பும் எமக்கிருந்தது. விவசாயத்தை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் எமது நோக்கமாக இருந்தது. கடந்த ஆறரை வருடங்களாக அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளது.
60000 ஹெக்டயர் காணிகளில் புதிதாக விவசாயத்தை மேற்கொண்டோம். இதனால் பல மில்லியன் கணக்கான மக்கள் பயனடைந்தனர். வங்கிக் கடன் உள்ளிட்ட உதவிகள் சலுகைகள் நிவாரணங்களை வழங்கியதன் மூலம் விவசாயிகளின் கைகளுக்கு அதிக வருமானம் கிட்ட வழி செய்துள்ளோம்.
கிராமப்புற பாதைகளை புனரமைத்தோம்- கிராமங்களை நவீனமயப்படுத்தினோம்- மக்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்பத் தேவையான பின்னணியை நாம் ஏற்படுத்தினோம்.
கல்வி- சுகாதாரம்- தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனளித்தன. அதனால்தான் யாழப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்தும் அம்பாந்தோட்டையிலிருந்தும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடிந்துள்ளது.
அபிவிருத்தியின் பயனை மக்கள் அனுபவிக்கச் செய்வதுடன் வறுமை நிலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
நாம் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தும்போது அதனை சில சக்திகள் விமர்சிக்கின்றன. இதன் மூலம் அந்த பிரதேசங்கள் கண்டு வரும் அபிவிருத்தியை அவர்கள் நேரில் போய்ப்பார்க்க வேண்டும்.
தற்போது நகரங்களைப் போன்றே கிராமங்களும் முழுமையான அபிவிருத்தியையடைந்து வருகின்றன. கிராமத்திற்கும் நகரத்திற்குமான வித்தியாசம் குறைந்து வருகிறது. நீர்- மின்சாரம்- விளையாட்டு மைதானம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சிலர் எரிச்சல்படுகிறார்கள்.
நகரத்தையும் கிராமத்தையும் ஒன்றிணைத்து நகரங்களுக்கு வழங்கப்படும் வசதிகளையும் கிராமங்களுக்கும் வழங்குவதற்கான பொறுப்பினை நாம் கொண்டுள்ளோம்.
பொருளாதார சுதந்திரத்தை சகல மக்களும் அனுபவிக்க வைப்பது எமது பொறுப்பாகும். வறுமை ஒழிக்கப்படுவதற் கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
அடுத்த வருடம் கிழக்கில் தேசத்தின் மகுடம் கண்காட்சியை நடத்த உத்தேசித்துள்ளோம். கிழக்கின் திருகோணமலை- அம்பாறை- மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களை மையப்படுத்தி இதனை நடத்துவதே எமது நோக்கம்.
இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு நான் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment