Pages

Wednesday, February 8, 2012

துப்பாக்கி சூடு நடந்த சங்கரன்கோவிலில் அதிரடிப்படை குவிப்பு!

Wednesday,February,08,2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவிலில் நேற்றிரவு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு டிஎஸ்பி, 3 எஸ்ஐக்கள், 3 ஏட்டுகள் உள்பட 24 பேர் காயம் அடைந்தனர். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். போலீசார் விடிய விடிய ரோந்து சென்றனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகர், காந்திநகர், கழுகுமலை சாலை பகுதியில் உள்ள காளியம்மன், உச்சினி மாகாளியம்மன் மற்றும் அம்மன் கோயில்களில் தை மாத கொடை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் காமராஜர் நகரை சேர்ந்த மக்கள் தீர்த்த நீர் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கழுகுமலை சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.

அங்குள்ள பெரிய பள்ளிவாசல் அருகே ஊர்வலம் வந்தபோது, பள்ளிவாசலை நோக்கி செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள் பள்ளிவாசல் முன்பு திரண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். அப்பகுதியில் இருந்த ஓட்டல், கடைகள், கார், லாரி, ஆட்டோ, பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. தகவலறிந்து நெல்லை டிஐஜி வரதராஜு, எஸ்பி விஜயேந்திர பிதரி, ஏடிஎஸ்பி மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கலவரக்காரர்கள் எஸ்பி விஜயேந்திரபிதரி மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அவர் காயமின்றி தப்பினார். உடனே போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தில் சங்கரன்கோவில் டிஎஸ்பி (பொறுப்பு) ஜமீம், டவுன் எஸ்ஐக்கள் சுதா, சொக்கலிங்கம், ராஜகோபால், மூன்று ஏட்டுக்கள் மற்றும் 17 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால் நேற்றிரவு சங்கரன்கோவிலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் தென்மண்டல ஐஜி ராஜேஷ்குப்தா இரவோடு இரவாக விரைந்துவந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை போலீசாரின் அதிரடி வேட்டையில் கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment