Pages

Sunday, February 5, 2012

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இனங்களுக்கிடையே பிரிவினை ஏற்படும்: அதாவுல்லா!

Sunday, February 05, 2012
இலங்கை::மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழும் சகலவின மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட வழிவகுக்குமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களென இனங்களைப் பிரிப்பதும் எமது நாட்டினைப் பொறுத்தவரையில் பொருத்தமானதல்லவெனவும் அவர் கூறினார்.

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம் அம்பாறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை அம்மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மாகாணங்களில் வாழும் சகலவின மக்களுக்கும் தேவையான பிரயோசனப்படுத்தக்கூடிய அதிகாரங்களே வழங்கப்பட வேண்டுமே தவிர சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கென்று அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அது நாட்டினை கூறுபோடுவதாக அமையும்.
நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்துவரும் இந்நிலையில் பொறாமை கொண்ட வெளிநாட்டுச் சக்திகள் இந்நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு முயற்சிக்கின்றன. அதேபோல் உள்நாட்டில் அதிகாரத்தினை பெற எத்தனிக்கும் சக்திகளோடு சேர்ந்து நாட்டின் தலைமைத்துவத்தினையும் அரசாங்கத்தினையும் கவிழ்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமை நாட்டில் மீண்டும் குழப்பத்தினை ஏற்படுத்தி குளிர்காய முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை' என்றார்.

No comments:

Post a Comment