Thursday, February 09, 2012இலங்கை::புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 42 பேர் நேற்று சமூக வாழ்வில் இணைக்கப்பட்டனர். அநுராதபுரம், ஒயாமடுவில் நடைபெற்று வரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி பூமியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மேடையில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 42 பேரும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர 42 பேரையும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நிகழ்வில் கமநல சேவைகள், வனஜீவராசிகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ பிரதியமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்க, மாகாண சபை உறுப்பினர் எஸ். எம். ரஞ்சித், அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எஸ். சதீஷ் குமார், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. பி. கொடிபிலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் ஐந்தாவது நாளான நேற்றைய தினமும் கண்காட்சி பூமியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இவற்றில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் பிரதான மேடையில் நடைபெற்றன.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் கண்காட்சி பூமியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மேடையில் அரங்கேற்றப்பட்டன.
சிங்கள, தமிழ் பாடல்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களால் இந்த மேடையில் பாடப்பட்டதுடன், நடன நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டினர். இது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
விடுவிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், குடும்ப உறவினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இந்தக் கண்காட்சியையும் இலவசமாக பார்வையிட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்களுக்கு பரிசுப் பொதிகளும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் அவர்களால் வெளிக்காட்டப்பட்ட திறமைகள் பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் சந்திரசிறி கஜதீர உரையாற்றுகையில் :- புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சகல துறைகளிலும் தேர்ச்சி, நிபுணத்துவம் பெற்றவர்களாகவே வெளியேறிச் செல்கின்றனர். அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு தேவையான சகல வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படுகின்றன.
ஆயுதம் ஏந்திய இந்த இளைஞர், யுவதிகளை நாட்டிற்கு பயனுள்ளவர்களாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியதுடன், அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கென 200 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமாதானம், ஐக்கியத்தை காண்பிக்கும் வகையில் தமது நடவடிக்கைகளை தற்பொழுது முன்னெடுத்துச் செல்கின்றனர்.
ஆயுதங்களை ஏந்திய கைகளில் தற்போது புத்தகங்களையும், இசைக் கருவிகளையும் ஏந்தி நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த செயற்பாடுகள் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
இருண்ட யுகத்திலிருந்து மீண்டவர்கள் அரசியல் இலாபத்திற்காக செயற்பாடுகளின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாட்டிற்கு நல்ல பிரஜைகளாகவும், நாட்டின் அபிவிருத்தியின் பங்காளர்க ளாகவும் செயற்பட வேண்டும்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களில் 169 பேர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
அதேபோன்று, 639 பேர் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். இவர்களில் 300 பேர் சித்தியடைந்துள்ளனர். இதேபோன்று 140 பேர் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment