Friday, February 10, 2012பெங்களூர்::சட்டசபையில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்தது மட்டும் போதாது. எம்எல்ஏ பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 30 தேதி தொடங்கியது. சிந்தகி தாலுகாவில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக நேற்று முன்தினம் சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதி, மகளிர் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோர் செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்தனர். சபை நடவடிக்கைகளை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராவில் இது பதிவாகி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர்களின் செயலுக்கு சித்தராமையா, ம.ஜ.த தலைவர் குமாரசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செல்போனில் தனக்கு அமைச்சர் கிருஷ்ணபலேமர் அனுப்பிய எம்எம்எஸ்-ஐ பார்த்ததாக கூறினர். இதையடுத்து பெங்களூரில் பாஜ உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கட்சி உத்தரவை ஏற்று 3 அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, 3 அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகள் அமளியால் அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஸ்தம்பித்தது.
இந்த சர்ச்சை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட அனைத்து கட்சிக் குழுவை சபாநாயகர் போப்பையா நியமித்தார். இக்குழு மார்ச் 13ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தவிர 3 அமைச்சர்களும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார். இதற்கிடையில் அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், Ôசட்டப் பேரவை தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரின் எம்எல்ஏ பதவியையும் பறிக்க வேண்டும்Õ என்று சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினர். பின்னர் 12 மணிக்கு சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் மோசம்மா ஆகியோர் தலைமையில் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து காங்கிரசார் இன்று மனு கொடுத்தனர்.
மேலும், ஆபாச படம் பார்த்த 3 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லி காங்கிரஸ், ம.ஜ.த, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
அமைச்சர்கள் ரசித்த காட்சிகள் பரவுவதால் பரபரப்பு
கர்நாடக சட்டசபையில் இருந்த போது நேற்றுமுன்தினம் அமைச்சரின் செல்போனுக்கு ஆபாச படங்கள் எம்எம்எஸ்சில் அனுப்பப்பட்டுள்ளன. அதில் உள்ள காட்சிகளை பார்க்க எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினருமே ஆர்வம் காட்டினர். இந்நிலையில், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3 அமைச்சர்களும் வேறு வழியின்றி தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். பதவி பறிபோக காரணமாக இருந்த ஆபாச காட்சிகள் இப்போது மற்றவர்களுக்கு செல்போன் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் பரவி வருகின்றன. இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment