Pages

Friday, February 3, 2012

மக்களிடம் அச்சம் தீர்ந்துள்ளது: கூடங்குளத்தில் பணி தொடங்கினால் 3 மாதங்களில் மின் உற்பத்தி!

Friday, February 03, 2012
நெல்லை::கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பில், ‘கதிர்வீச்சும் பாதுகாப்பான ஆரோக்கியமும்’ என்ற விஞ்ஞான கருத்தாய்வு நிகழ்ச்சி நெல்லையில் நேற்று நடந்தது.
இதற்கு பின்னர் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் கடந்த 3 மாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய நிபுணர் குழுவும் ஆய்வு நடத்தி இதை உறுதி செய்துள்ளது.

எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சம் தீர்ந்துள்ளது. இதன்மூலம் விரைவில் மின் உற்பத்தி துவங்க வாய்ப்புள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 4 மாதங்களாக அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இங்கு பணியாற்றிய ஒப்பந்ததாரர்கள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவர்களின் ஊருக்கு சென்று விட்டனர். அணுமின் நிலைய பணிகளை துவங்க அனுமதி கிடைத்தால் முதலில் அனைவரையும் ஒன்று சேர்த்து பணிகளை தொடங்க வேண்டும். பின்னர் அணு உலைகளில் எரிபொருள் நிரப்ப வேண்டியுள்ளது. இதன் ஒவ்வொரு கட்டத்தையும் அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம் ஆய்வு செய்து அனுமதி வழங்கும். பணிகளை ஆரம்பித்த 3 மாதங்களில் மின் உற்பத்தி தொடங்க முடியும்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 925 மெகாவாட் வழங்க மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதை உயர்த்தி வழங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் தொகுப்புக்கு அனுப்புவது மட்டுமே எங்களின் பணியாகும்.
இவ்வாறு காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.

பேட்டியின் போது, கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர், மும்பை இந்திய அணு சக்தி கழக முதன்மை பொறியாளர் பட், மும்பை டாடா மருத்துவமனை அணுசக்தி மருந்தியல் துறை தலைவர் டாக்டர் ரங்கராஜன், மும்பை அணுசக்தி கழக முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயின், கூடுதல் தலைமை பொறியாளர் காளிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment