Saturday, February 11, 2012

ராவணனுக்கு 2 எம்எல்ஏ உதவி : விசாரணையில் பகீர் தகவல்!

Saturday, February 11, 2012
பெ.நா.பாளையம்::அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்பட 3 மக்கள் பிரதிநிதிகள் தனக்கு உதவி செய்ததாக விசாரணையில் ராவணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சிறுமுகை கிச்சகத்தியூரை சேர்ந்தவர் ரவிகுமார். கான்ட்ராக்டர். இவரை மிரட்டி ரூ.10லட்சம் பறித்ததாக கடந்த மாதம் 26ம் தேதி சசிகலாவின் உறவினர் ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

15 நாள் காவல் நேற்றுடன் முடிந்ததையடுத்து ராவணனும், மோகனும் மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ரபீக் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு வக்கீல், ‘ராவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார். இதற்கு ராவணன் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங் களையும் கேட்ட மாஜிஸ்திரேட் ரபீக், ஒருநாள் போலீஸ் காவலில் ராவணனை விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து 11ம் தேதி (இன்று) மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து ராவணனையும், மோகனையும் விசாரணைக்காக போலீசார் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கோவை குற்றப்பதிவுக் கூடத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் மாரியப்பன் விசாரணை நடத்தினார். இன்று அதிகாலை தொடங்கி ராவணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வாக்கை பயன்படுத்தி யாருக்கெல்லாம் பதவி வாங்கி கொடுத்தீர்கள், யாரிடமெல்லாம் மோசடி செய்தீர்கள், அவர்களிடம் எவ்வளவு தொகை மோசடி செய்திருப்பீர்கள், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது என பல்வேறு கேள்விகளை கேட்டு அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

பல கேள்விகளுக்கு மவுனமாக இருந்த அவர், தனக்கு அதிமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட 3 மக்கள் பிரதிநிதிகள், தனக்கு அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ராவணன், மோகன் இருவரும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு, நீதிபதி ரபீக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment