Sunday, February 12, 2012உடுமலை::திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போலீசார் துரத்தி சென்ற மினிலாரி ஓடையில் கவிழ்ந்து 2 பக்தர்கள் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை அருகே மாவுத்தம்பதி ஊராட்சியை சேர்ந்த சின்னாம்பதி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த 6 குழந்தைகள், 14 பெண்கள், 10 ஆண்கள் ஆகிய 30 பேர் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு மினி லாரியில் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7 மணியளவில் பழனி - உடுமலை ரோட்டில் காரமடை எனுமிடத்தில் வந்த மினி லாரி ஒரு பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்தவர் படுகாயமடைந்து அதே இடத்தில் இறந்தார். மினி லாரியை நிறுத்தாமல் டிரைவர் சிவா ஓட்டிச் சென்றார்.
தகவலறிந்த போலீசார் மினி லாரியை துரத்திச் சென்றனர். போலீசார் விரட்டு வதை அறிந்த மினி லாரி டிரைவர், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக நேர் வழியில் செல்லாமல், குறுக்கேயுள்ள மடத்துக்குளம் - காரத்தொழுவு ரோட்டில் திருப்பிச் சென்றார். வேடபட்டி பிரிவு அருகே சென்றபோது, ரோட்டோரம் கொட்டப்பட்டு கிடந்த கல், மணல் குவியலில் ஏறியதில் கவிழ்ந்து, செக்கான் ஓடையில் மினி லாரி விழுந்தது. இதில், பெரியண்ணன்(50), சின்னகண்ணன்(52) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உட்பட 29 பேரும் படுகாயமடைந்தனர். விரட்டிச் சென்ற போலீசார் மற்றும் அப்பகுதியினர், 2 பேரின் சடலம் மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment