Tuesday, January 03, 2012 12சென்னை::கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் பங்கேற்ற மாநாட்டில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது, டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உதயகுமார் என்பவர் தலைமையில், போராட்டம் நடக்கிறது. அணு உலைக்கு ஆதரவாக, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி, சத்திரிய நாடார் மக்கள் இயக்கம், சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள், போராட்டம் நடத்துகின்றன. அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில், அணு உலைக்கு ஆதரவாக, கடந்த 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள், நாகர்கோவிலில் மாநாடு நடந்தது. இதில், 30ம் தேதியன்று அணுமின் கழக விஞ்ஞானிகள், பொதுமக்களுக்கு விளக்கம் தெரிவித்த போது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாநாட்டில் நுழைந்து, குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாநாடு அமைப்பாளர் சத்தியசீலன், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி., குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., கோட்டாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: அணு விஞ்ஞானிகள் பேசும்போது, அங்கு வந்த நான்கு பேர், மாநாட்டில் குண்டு வெடிக்கும் என்று, மண்டப காவலாளியிடம் மிரட்டினர். அங்கு சென்ற கர்நாடக காங்கிரஸ் (ஐ.என்.டி.யூ.சி.,) தலைவர் பிரகாசத்தின் சட்டையைப் பிடித்து மிரட்டியபோது, அவர் கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர்.
அவர்கள் ஓடும் போது, "அணு உலை எதிர்ப்பாளர்கள் உதயகுமார் மற்றும் மனோ தங்கராஜை எதிர்த்து போராட்டம் நடத்தினால், குண்டு வைப்போம்' என, கோஷமிட்டு தப்பினர். இதுகுறித்து, உதயகுமார், மனோ தங்கராஜ் மற்றும் அவரது ஆதரவு மிரட்டல் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment