Thursday,January 05, 2012சென்னை::சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. போராட்டத்தின்போது, தேசிய கொடியை பயன்படுத்திய அன்னா ஹசாரே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் ஜான் செல்வராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வினோத்குமார் சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் டி.எஸ்.என். பிரபாகரன் ஆஜராகி பேசியதாவது: ஊழல் ஒழிப்பு இயக்கத்தை அன்னா ஹசாரே நடத்தி வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வரக் கோரி டெல்லி, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்த போராட்டங்களில் அன்னா ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் தேசிய கொடியை பயன்படுத்தி வருகிறார்கள். சட்டப்படி தேசிய கொடியை கைகுட்டையாகவோ, போர்வையாகவோ, சால்வையாகவோ பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி அவமதிப்பவர்களுக்கு, சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை மீறும் அன்னா ஹசாரேவும், அவரது ஆதரவாளர்களும் தேசிய கொடியை கைகுட்டையாகவும், போர்வையாகவும், சால்வையாகவும் பயன்படுத்தியுள்ளனர். இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும். கடந்த 1971ம் ஆண்டு சட்டப்படி, தேசியக் கொடியை அவமதித்து வரும் அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கொடியை அன்னா ஹசாரேவும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வக்கீல் பிரபாகரன் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, ‘‘தேசிய கொடியை யாரும் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது’’ என்றார். இதற்கு வக்கீல் பிரபாகரன் பதில் அளிக்கும் போது, ‘‘தேசிய கொடியை தவறாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
உடனே நீதிபதி குறுக்கிட்டு, ‘‘அன்னா ஹாசரே, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. அன்னா ஹசாரேவின் நோக்கம் சரியானதுதான். ஆனால் அனைவரையும் லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். இதை செயல்படுத்த முடியாது. அன்னா ஹாசாரே ஒரு சர்வாதிகாரி போல செயல்பட நினைக்கிறார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment