Wednesday,January,04,2012சென்னை: தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று பிற்பகல் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் புறப்பட்டுச் சென்றார். பின்னர் ஹெலிகாப்டரில் பறந்தபடி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் கடலூர் திரும்பிய ஜெயலலிதா அங்கு நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மு.சி.சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவள்ளி ஆகியோரும் உடன் இருந்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீனவர்களுக்கு கூடுதல் நிதி உதவி:ஜெயலலிதா அறிவிப்பு!
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார்கள். முதல்கட்டமாக புயல் நிவாரண நிதியாக ரூ.150 கோடியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். நேற்று நடந்த ஆய்வு கூட்டத்துக்குப்பின் மேலும் ரூ.700 கோடி ஒதுக்கியுள்ளார்.
இதில் மின்வாரிய சேத சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்க ரூ.150 கோடி, பயிர்சேத இழப்பீட்டுக்காக ரூ.166 கோடி, சேதம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டு உதவியாக ரூ.114 கோடி வழங்கப்படுகிறது. குடிநீர் வினியோகத்துக்கு ரூ.50 கோடி, உயிரிழப்பு, கால்நடை இழப்பு, பாதுகாப்பு மையங்களுக்கு என ரூ.50 கோடி, மீன்பிடி படகுகள் சேதத்துக்காக ரூ.20 கோடி கொடுக்கப்படுகிறது.
தானே புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 3 1/2 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கி இருக்கிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுதவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.2,500-ம், ஒரு வீட்டுக்கு ரூ.5 ஆயிரமும் கொடுக்கப்படுகிறது.
இவற்றை வழங்க 100 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்குதலில் கடலூர் மாவட்டத்தில் 27 உயர் அழுத்தமின் கோபுரங்கள், 4,500 மின் வினியோக மாற்றகம், 36 ஆயிரம் மின்கம்பங்கள், 350 கிலோ மீட்டர் நீள மின்கம்பிகள் சேதம் அடைந்துள்ளன. 1000 பணியாளர்கள் இதை சீரமைத்து வருகிறார்கள். நாளைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்வியோகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 58 ஆயிரம் ஹெக்டேர் நெல்பயிர், 23 அயிரத்து 500 ஹெக்டேர் முந்திரிபயிர், 50 ஆயிரத்து 752 ஹெக்டேர் கரும்பு, 8 ஆயிரத்து 947 ஹெக்டேர் வாழை, பயிறு, பருத்தி மற்றும் பயிர்களும் சேதம் அடைந்தன. இதில் நெல்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும் மற்ற நீர்பாசன பயிர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம் வழங்கப்படுகிறது.
முந்திரி, பலா ஹெக் டேருக்கு 9 ஆயிரம் வழங்கப்படும். இவை மத்திய அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டு தொகையை விட அதிகம். மீனவர்களுக்கு விசைப்படகு சேதம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சம், பகுதி சேதம் அடைந்த விசை படகுகளுக்கு ரூ.3 லட்சம், கட்டுமரங்களுக்கு 32 ஆயிரம், பாரம்பரிய மீன் பிடிபடகுகளுக்கு ரூ.7 ஆயிரத்து 500, பகுதி சேதம் அடைந்தால் ரூ.2 ஆயிரத்து 500, பகுதி சேதம் அடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.10 ஆயிரம், எம்.ஆர்.பி.படகு மற்றும் வலைகளுக்கு ரூ.75 ஆயிரம், பகுதி சேதம் அடைந்தால் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மொத்தம் 46 ஆயிரம் மீன்பிடி படகுகள் சேதம் அடைந்துள்ளன. குடிநீர் வினியோகத்துக்கு மேலும் 309 ஜெனரேட்டர்கள், 127 லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. 11 கூட்டு குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படுகின்றன. 8 அதிகாரிகள் பணிகளை மேற்பார்வையிடுகிறார்கள். சீரான பால் வினியோகத்துக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. புயலால் உயிர் இழந்த 519 கால்நடைகள் 5100 கோழிகளுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம், ஆடுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், கோழிகளுக்கு தலா ரூ.500 வழங்கப்படுகிறது. 1,458 இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். 90 ஜே.சி.பி. எந்திரங்கள், 3 கிரேன், 9 லாரிகள் பயன்படுத்தப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டன.
சாலை பராமரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு காரணமாக சீரமைப்பு, பராமரிப்புபணி மற்றும் நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment