Thursday, January 5, 2012

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திற‌க்க‌ப்ப‌ட்டது!

Thursday,January 05, 2012
திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் இன்று திறக்கப்ப‌ட்டது. இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் த‌ரிசன‌ம் செ‌ய்தன‌ர். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்புடையது. இந்த விழா கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.

திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து 10 நாட்களும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து திருநாட்கள் பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 26ம் தேதி முதல் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாள் துவங்கியது. தொடர்ந்து காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ‌திற‌க்க‌ப்ப‌ட்டது. மு‌ன்னதாக உற்சவர் நம்பெருமாள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்பட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 2ஆம் பிரகாரத்தை வலம் வ‌ந்தா‌ர்.

அங்கிருந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3ஆம் பிரகாரத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் வ‌ந்தா‌ர். அதற்கு முன்னர் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பங்களை கேட்டரு‌ளினா‌ர். இதனைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்ப‌ட்டது. சொர்க்கவாசல் திற‌க்க‌ப்ப‌ட்டது‌ம் ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் த‌ரிசன‌ம் செ‌ய்தன‌ர். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கோவில் வளாகத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment