Tuesday, January 03, 2012 12திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் அரசு பஸ், தனியார் ஆம்புலன்ஸ் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி பலியாயினர். இறந்த மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுசென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ரேவதி (30). இவர், உடல்நலக்குறைவு காரணமாக திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். ரேவதியின் தந்தை காட்பாடி வீராந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (68), விவசாயி. தாய் மோகனா (55). இந்நிலையில், மகளின் உடலை ஆரணியில் இறுதி அஞ்சலிக்காக சிறிதுநேரம் வைத்துவிட்டு பின்னர், காட்பாடிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி தனியார் ஆம்புலன்சில் சடலத்தை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி நேற்றிரவு புறப்பட்டனர். ஆம்புலன்சை தயாநிதி (22) என்பவர் ஓட்டினார்.
திருவண்ணாமலை& செங்கம் சாலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்தது. அதே நேரம் திருவண்ணாமலையில் இருந்து ஓசூருக்கு அரசு பஸ் பயணிகளுடன் சென்றது. இந்த சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே ஆம்புலன்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.இதில் ஆம்புலன்ஸ் நொறுங்கியதில், அதில் பயணம் செய்த நாகராஜ், மோகனா ஆகியோர் அதே இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் தயாநிதி, அவருடன் வந்த உதவியாளர் தென்கரும்பலூரை சேர்ந்த ஏழுமலை (19) மற்றும் கிருஷ்ணகிரி ஜேக்கப் நகரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சுந்தரம் (43), ஓசூரை சேர்ந்த கண்டக்டர் ஜெலந்தர்குமார் (39), பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி உருதியார்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி (40) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மகளின் சடலத்தை கொண்டு சென்றபோது விபத்தில் சிக்கி தம்பதி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment