Wednesday, January 4, 2012

தேனியில் ரூ.1350 கோடியில் நியூட்ரினோ ஆய்வு மையம்!

Wednesday,January,04,2012
புவனேஸ்வர்:பிரபஞ்சம் உருவாக காரணமான அடிப்படை துகள்கள் பற்றி ஆய்வு செய்ய, தேனியில் ரூ. 1,350 கோடி செலவில் ‘நியூட்ரினோ அணு துகள் ஆய்வு மையம்‘ அமைக்கப்படும்’’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 99வது இந்திய அறிவியல் மாநாடு 5 நாட்கள் நடக்கிறது. இதை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவை தொழிற்துறைகள் அதிகரிக்க வேண்டும். தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதம் மட்டுமே இதற்காக செலவிடப்படுகிறது. 12வது ஐந்தாண்டு திட்டத்துக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை செலவழிக்கும் இலக்கை சாதிக்க தொழிற்துறைகள் உதவ வேண்டும்.

ரூ.5 ஆயிரம் கோடி செலவில் சூப்பர் கம்ப்யூட்டர், தேசிய அறிவுத்திறன் மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் இதை அமல்படுத்தும். பிரபஞ்சத்தை உருவாக்கிய அடிப்படை துகள்கள் பற்றி ஆய்வு செய்ய, தமிழகத்தில் போடி அருகே பொட்டி புரத்தில் ஸி1,350 கோடி செலவில் ‘நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு மையம்’ அமைக்கப்படும்.

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அதே நேரம், அறிவியலில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்டி) பெற்ற 2 ஆயிரம் இந்திய பெண்களில் 60 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே குடும்ப பிரச்னைகளால் வேலைக்கு போகவில்லை. பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான் முக்கிய காரணம். பணி நியமன நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை தேவை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

அறிவியலில் நம்மை சீனா முந்தி விட்டது’

மாநாட்டில் பிரதமர் பேசுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் உலகில் இந்தியாவின் வளர்ச்சி சரிந்து வருகிறது. இந்த துறையில் சீனா போன்ற நாடுகள் நம்மை முந்தி விட்டன. சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்த போதிலும், நம்முடைய சாதனைகளை பார்த்து திருப்திபட்டுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அறிவியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த இன்னும் அதிகமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.

No comments:

Post a Comment