Pages

Wednesday, December 7, 2011

பிரித்தானியாவின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் கருத்து உண்மைக்குப் புறம்பானது-பந்துல ஜயசேகர!

Wednesday,December,07,2011
பிரித்தானியாவின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2010ம் ஆண்டு நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையை தாமே எழுதியதாக பொட்டிங்கர் நிறுவனம் குறிப்பிட்டதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது. எனினும், இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான போலித் தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பிரித்தானிய ஊடகத்தின் தகவலை பெல் பொட்டிங்கர் நிறுவனம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களில் குழப்ப நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக நாடுகளுக்கு இடையிலான யுத்தத்திற்கும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு எதிராக ஒர் நாடு புரியும் யுத்தத்திற்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பயங்ரவாத அமைப்பு ஒன்றுக்கு எதிராக ஓர் நாடு யுத்தம் புரிவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு புதிய பிரகடனங்களை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை விடவும் தமது அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்கியதாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வில்சன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து புலனாய்வு ஊடகப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பெல் பொட்டிங்கர் நிறுவனம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் பெலாரஸ், பஹ்ரேய்ன் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் பெல் பொட்டிங்கர் சேவை வழங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தின் பின்னர் நாட்டின் நன்மதிப்பை உலக அரங்கில் உயர்த்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பெல் பொட்டிங்கர் நிறுவனத்திற்கு மூன்று மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இலங்கையின் நன்மதிப்பை அதிகரிக்கும் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணி பெல் பொட்டிங்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெல் பொட்டிங்கர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடமையாற்றியமை இரகசியமானதல்ல என பி.பி.சீ ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் புலம்பெயர் தமிழர்களினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றிற்கு பெல்பொட்டிங்கர் தனது பிரதிநிதிகளை அனுப்பி தகவல்களை திரட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment