Pages

Friday, December 9, 2011

மீனவர் பிரச்னை: சர்ச்சைக்குரிய கடலோர காவல் படையின் கருத்து வாபஸ்!

Friday, December 09, 2011
மதுரை:மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கில், சர்வதேச கடல் எல்லையில் இருந்து, ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு, மீன் பிடி தடை மண்டலம் ஏற்படுத்த, மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவித்த கருத்தை, அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பால், கடலோர காவல் படை வாபஸ் பெற்றது.மதுரை மாவட்டம், எட்டிமங்கலம் வழக்கறிஞர் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ""கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க உத்தர விட வேண்டும்''என கோரினார்.

வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கடலோர காவல் படை துணை இயக்குனர் ஜெனரல் மூர்த்தி பதில் மனு செய்தார்.அம்மனுவில், ""மும்பை தாக்குதலை தொடர்ந்து, குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லையில், மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. எல்லை மீறும் மீனவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்திய, இலங்கை சர்வதேச கடல் எல்லையில், ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள், மீன் பிடி தடை மண்டலம் ஏற்படுத்த வேண்டும். அத்துமீறி மீன் பிடித்தலை தடை செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப் பட்டது.கடலோர காவல் படையின் இந்த கருத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மனுவை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில் இருந்து, சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கம் செய்து, துணை இயக்குனர் ஜெனரல் மூர்த்தி மனு செய்தார். அதில், ""முந்தைய பதில் மனுவில் இடம் பெற்ற மீனவர்கள் எல்லை மீறலை தடுக்கும் வகையில், ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு மீன்பிடி தடை மண்டலம் ஏற்படுத்த வேண்டும் என்பதை நீக்கம் செய்து விட்டு, மற்றவைகளை ஏற்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment