Pages

Monday, November 21, 2011

சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன் சிங் சந்திப்பு!

Monday, November 21, 2011
சிங்கப்பூர்: மேற்கு நாடுகளில் போலவே கிழக்கு நாடுகளிலும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த, `கிழக்கு நோக்கி' என்ற கொள்கையை இந்தியா உருவாக்கி உள்ளது. அதன்படி, கீழ்த்திசை நாடுகளுடன் உறவை மேம்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதன் ஒரு அங்கமாக, சிங்கப்பூரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று நண்பகலில் அந்த நாட்டு பிரதமர் லீ செய்ன்லுங்கை சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் வர வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் மற்றும் அவருடைய மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ மதிய விருந்து அளித்து உபசரித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ``சிங்கப்பூருடனான உறவுக்கு இந்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள சிங்கப்பூர், வளரும் நாடுகள் அனைத்துக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் மதிப்பு மிக்க பங்குதாரராக சிங்கப்பூர் இருக்கிறது. ஆசியான் நாடுகளில், இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவிலான முதலீடு, தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு போன்றவற்றை வரவேற்கிறோம்'' என்றார்.

இந்தியாவில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. ரூ.70 ஆயிரம் கோடி நேரடி முதலீடு செய்திருக்கிறது. இது தவிர, கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கு இடையே சுமார் ரூ.85 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது.

மேலும், ஆந்திராவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் கூட்டு சேர்ந்து ஆயிரம் மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு சிங்கப்பூர் ஆதரவு அளிக்கும் என அந்த நாட்டு பிரதமர் லீ தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச விவகாரங்களில் மிகவும் துடிப்பான பங்கை இந்தியா ஆற்றி வருவதை பார்க்கிறோம். எனவே, விரிவு படுத்தப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு நாங்கள் (சிங்கப்பூர்) முழு ஆதரவு அளிப்போம்'' என்றார்.

சிங்கப்பூருடன் இந்தியாவின் உறவுக்கு அடிகோலிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக அங்குள்ள `சிங்கப்பூர் இந்தியன் அசோசியேசன்' தலைமை அலுவலகத்தில் நேருவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திறந்து வைத்தார்.

அங்கு கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி நினைவரங்கத்தையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் சிங்கப்பூர் மந்திரிகள் கோ சோக் டோங், யாகோப் இப்ராகிம், ஹெங் ஸ்வீ கீத் மற்றும் சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய வாரிய தலைவர் யீவ் கவுத் ஆகியோர் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் தேசிய பாரம்பரிய வாரியம் அமைப்பதற்கு உதவிய 4 வெளிநாட்டு தலைவர்களில் நேருவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று மாலையில் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி புறப்பட்டார். முன்னதாக இந்தோனேசியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து `ஆசியான்' மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதற்காக, கடந்த வாரம் இந்தியாவில் இருந்து மன்மோகன் சிங் புறப்பட்டார். 1 1

No comments:

Post a Comment