Pages

Tuesday, November 1, 2011

நிலப்பறிப்புக்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் - தர்மலிங்கம் சித்தார்த்தன்!

Tuesday, November 01, 2011
பண்டார வன்னியனின் 208வது நினைவுதினம் நேற்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா வவுனியாவில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவுதின நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் நினைவுதினக் கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதராதலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சண் மாஸ்டர் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும், பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் சித்தார்த்தன்;, 'பிரித்தானிய ஆட்சிக் காலத்தின்போது பண்டாரவன்னியன் வன்னி மண்ணைக் காப்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு சாத்வீக ரீதியாக வன்னி மண்ணைக் காப்பதற்காக முதலில் எமது காந்தீயம் அமைப்பின் ஊடாக இனக்கலவரங்களால் ஏதிலிகளாக்கப்பட்டு திக்குத்தெரியாது நின்ற பெருமளவிலான மலையகத் தமிழ்மக்களை வன்னியின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் குடியேற்றினோம். இவ்வாறாக பல கிராமங்களை அமைத்து மலையகத் தமிழ்மக்களைக் குடியேற்றி வன்னியைப் பாதுகாப்பதில் கவனமெடுத்திருந்தோம். வன்னியைப் பாதுகாப்பதில் நடத்த போராட்டத்தில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்து ஆயுதப் போராட்டம் நிறைவுற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் நிலப்பறிப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு கட்சிகளான நாம் ஒன்றுபட்டு செயற்படும்போது, மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும' என்று கேட்டுக்கொண்டார்.

இதன்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒட்டிசுட்டான், மாங்குளம் மற்றும் வவுனியா பாடசாலைகளின் சிறார்கள் பங்குபற்றிய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment