Pages

Tuesday, November 22, 2011

பயங்கரவாத ஒழிப்பு புலிகளைப் தோற்கடிக்க இந்தியாவின் மௌனமே யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றது-நோர்வே அறிக்கையின் தரவு ஆவணத்தில்!

Tuesday, November 22, 2011
பயங்கரவாத ஒழிப்பு எனும் நிலைபாட்டிலிருந்து புலிகளைப் பொறுத்து, அமெரிக்காவும் இந்தியாவும் ‘கெட்ட போலீஸ்காரர்கள்’ எனும் அளவிலும் ஐரோப்பிய யூனியன், நோர்வோ போன்றன ‘நல்ல போலீஸ்காரர்கள்’ எனும் அளவிலும்தான் செயல்பட்டார்கள் என்கிறது நோர்வே அரசுக்காகக் கல்வித்துறை ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை. ஓரு புறம் மகிந்த ராஜபக்சேவின் அரசு புலிகளின் மீதான முழுமையான தாக்குதலுக்கான முஸ்தீபுகளில் ஈடபட்டிருந்த பொழுது, மறுபுறம் ஐரோப்பிய யூனியனும் அதனையொட்டிய பிறநாடுகளும் புலிகளைத் தடை செய்ததானது அவர்களிடையே ஒரு குழப்பத்தையும் திகைப்பையும் உருவாக்கியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தக் கொள்கையிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா என்பன இந்தப் பிரச்சினையைப் பார்த்துபோது, நோர்வேயின் செயல்பாடுகள் சில வேளை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானதாகப் பார்க்கப்பட்ட நிலைமையில், நோர்வே மத்தியஸ்தம் செய்வது என்பது மிகவும் சிக்கலுக்கு உள்ளானது.

புலிகளின் மீதான முனைப்பான தாக்குதலை மேற்கொள்ள இலங்கை அரசைத் தூண்டிய நிகழ்வுகள், நிலைமைகள் என்ன என்பது குறித்தும் அறிக்கை சில விடயங்களை முன்வைக்கிறது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சே தவிரவும், இந்தியா அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் என எந்த நாடும் புலிகளை ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட முடியும் எனக் கருதவில்லை.

இலங்கை அரசு புலிகளை யுத்தத்தில் தோற்கடிக்க முடியும் எனும் நிலைப்பாட்டுக்கு வந்ததற்கான மிகமுக்கியமான காரணங்களில் ஒன்றாக புலிகள் இயக்கத்திலிருந்தான கருணாவின் பிளவை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கருணாவின் பிளவுக்கான காரணமாக, வசதிபடைத்த யாழ்ப்பாணக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்குப் போக, அதிக அளவிலான கிழக்கு மாகாணத்தவர் புலிகளில் தொகையாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலைமை இருந்தது என்பதனை அறிக்கை குறிப்பிடுகிறது. கருணாவின் பிளவினால் புலிகளின் போராளிகளின் தொகை கணிசமாகக் குறைந்தது. அதனோடு புலிகளின் மிகப்பெரிய பின்னடைவாக, புலிகளின் வரலாற்றில் மிகப்பெரும் உளவுத்துறைக் கசிவாக அந்தப் பிளவு அமைந்தது என்கிறது அறிக்கை.

இந்த உளவுத்துறைக் கசிவினோடு பின்னாளில் தமிழ் மக்கள் புலிகள் உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்தினருடன் இணைந்து புலிகளை அழிப்பதில் பங்காற்றினார்கள் என்பதனையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

2004 ஆம் ஆண்டு சந்திரிகா குமரணதுங்காவின் காலத்தில் இந்தப் பிளவு ஏற்பட்டபோது, சந்திரிகா குமரணதுங்கா கருணாவைச் சந்திக்க மறுத்துவிட்டார். இலங்கையின் ஜனாதிபதியின் முடிவையும் மறுதளித்து விட்டு இலங்கை ராணுவம் கருணாவை விசாரணை செய்ததுடன், அவரை இலங்கை ராணுவத்துடன் சேரந்து செயல்படவும் இலங்கை ராணுவம் முயற்சியை எடுத்தது. அரசியல்வாதிகளின் முடிவை மறுத்துவிட்டு இலங்கை ராணுவம் சுயாதீனமாக முடிவெடுத்த இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றில் முக்கியமானது என அறிக்கை குறிப்பிடுகிறது.

கருணாவின் படையணி பின்னாளில் கிழக்கில் தோற்கடிக்கப்பட்டாலும், கருணாவின் பிளவு என்பது இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான ராணுவச் சமநிலையை இலங்கை ராணுவத்திற்கு ஏதுவானதாக மாற்றியமைத்தது எனத் திட்டவட்டமாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கருணாவின் பிளவு எந்த அளவு முக்கியமான பாத்திரத்தை இலங்கை ராணுவத்தில் நிலைபாட்டில் தோற்றுவித்ததோ அதே அளவு முக்கியத்துவத்தினை கதிர்காமர், நீலன்திருச்செல்வம் போன்றவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளும் அமெரிக்க மேற்கத்திய அரசுகளின் மீது ஏற்படுத்தியது. மேற்கத்திய அமெரிக்க ராஜாங்க மட்டத்திலான தமது ஏகப்பிரதிநித்துவ உறவுகளை எற்படுத்திக் கொள்வதற்கான மிகப்பெரும் தடைகளாக, இந்த மட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த கதிர்காமரையும் நீலன் திருச்செல்வத்தையும் விடுதலைப்புலிகள் அமைப்பு பார்த்தது. அவர்கள் கொல்லப்பட்டதானது நடைமுறையில் அமெரிக்க, மேற்கத்திய ராஜதந்திர மட்டத்திலிருந்து புலிகளை இன்னும் தூரப்படுத்தவே உதவியது.

மகிந்த ராஜபக்சேவுக்கும் ரணில் விக்கிரமசிங்கேவிற்கும் இடையிலான ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் இலங்கைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டதானது, மிக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில், அதாவது வெறும் இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இந்தத் தேர்தலானது இலங்கையின் வரலாற்றில் முக்
கியமான ஒரு செய்தியையும் உடன் விளைவாகக் கொண்டிருந்தது.

இதுவரைக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களின் பதவிகளைத் தீர்மானிப்பதாக இருந்த அல்லது கிங் மேக்கர்களாக இருந்த, தமிழர் மற்றும் முஸ்லீம்கள் எனும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமலேயே பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் வாக்குகளிலேயே ஜனாதிபதி பதிவியை அடைய முடியும் என்பதனை இது மகிந்த ராஜபக்சேவுக்குக் காண்பித்தது என்கிறது அறிக்கை. ஆங்கிலவயமாக்கப்பட்ட, கொழும்பை மையமாக் கொண்ட வர்க்கத்திலிருந்து வராத, பிரேமதாசாவின் கொள்கைகளின் சாயலையொத்த, கறைபடாத தூய கிராமியம், பாதுகாப்பு, சிங்கள மரபுக் கலாச்சாரத்தின் பாதுகாப்பு என்பவற்றை முன்னிறுத்திய, அனைத்துச் சிங்கள மக்களினதும் தலைவனாக மகிந்த சிந்தனையோடு ராஜபக்சே அரியானை ஏறினார் என்கிறது அறிக்கை.

கருணாவின் பிளவினால் ஏற்பட்ட ராணுவச் சமநிலைக்குலைவு, சிங்களப் பெரும்பான்மை வாக்குகளே ஆட்சியதிகாரம் பெறப்போதும் எனும் நடைமுறைச் செய்தி, இவற்றினுடன் அமெரிக்க மேற்கத்திய அரசுகள் பேசிவந்த பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகளான மனிதாபிமான யுத்தம், மக்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் எனும் கோஷங்களையும் மகிந்த ராஜபக்சே சவீகரித்துக் கொண்டார். இலங்கையின் குறிப்பிட்ட இனப்பிரச்சினை எனும் அம்சம் தள்ளப்பட்டு, முழமையாகப் பயங்கரசவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பதனை இலங்கை அரசு சாதுரியமாக முன்வைத்தது.

ராஜீவ்காந்தியின் படுகொலையை அடுத்து தனது ராஜதந்திர நகர்வுகளை இந்தியா அல்லாத மேற்கத்திய ராஜதந்திர நகர்வுகளின் மூலம் முன்னெடுக்க நினைத்த புலிகளின் அரசியல் நகர்வுகள் இப்போது மிகப்பெரும் சிக்கலை எதிர்கொண்டது.புலிகளின் மீதான ராணுவத்தீர்வு எனும் நிலைபாட்டுக்கு வந்தவுடன் செக்கோஸ்லாவாக்கியா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளிலிருந்து ராஜபக்சே கடனுக்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்தார். வியட்நாம்,பர்மா,ஜோர்டான், ஜப்பான்,ரஸ்யா, ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொண்டார். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் செய்மதியினூடாக உளவு பார்த்துச் சொன்னது. இந்தியா தமிழகத்தில் ஏற்படக் கூடிய பதட்டத்தைக் கவனம் கொண்டு, இரட்டை நிலைபாட்டைக் கைக்கொண்டது. ஓரு பக்கம் யுத்தத்தில் தமிழ் மக்களது பாதுகாப்புப் பற்றிப் பேசிய இந்தியா, மறுபுறம் புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிட, தமிழகப் பதட்டத்தை நினைவில் கொண்டு, இந்தியா நேரடியிலான கனரக ஆயுத உதவிகளைச் செய்யவில்லை என்றாலும், பிற நாடுகளிடமிருந்து இலங்கை ராணுவ தளவாடங்களை வாங்கிக் குவிப்பதற்கு அதிகாரபூர்வமற்ற ஒப்புதலை வழங்கியிருந்தது.

இவ்வகையில் இந்தியாவின் மௌனமே இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றது என்பதனை அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தச் சூழ்நிலையில் 2009 பிப்ரவரி மாதம் நோர்வேயின் மத்தியஸ்தத்தை மகிந்த ராஜபக்சே முடிவுக்குக் கொண்டுவந்தார். யுத்தம் தவிர்க்க முடியாதது எனும் நிலை வந்தவுடன் வெகுமக்களைப் பாதுகாப்பது, அழிவுகளைக் குறைப்பது, அதற்காகச் செயல்படுவது எனும் நிலைபாட்டுக்கு வந்து நோர்வே, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து செயலில் இறங்கியது.

இலங்கை அரசு இச்சூழலில் மூன்று வகையிலான விவாதத்தை முன்வைத்தது. முதலாவதாக, மனிதாபிமான யுத்தம், மக்களைப் பாதுகாக்கும் யுத்தம் எனும் பயங்கரவாத ஒழிப்புக் கொள்கையை அது முன்வைத்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க, மேற்கத்திய அரசுகளின் நடைமுறையை ஒப்பிட்டு, மனித உரிமை மீறலை முன்வைத்துத் தம் மீது அழுத்தம் கொடுப்பதிலுள்ள அமெரிக்க, மேற்கத்தியத் தகைமையை அது கேள்விக்கு உட்படுத்தியது. இரண்டாவதாக, இறையாண்மையையும், உள்நாட்டுத் தீர்வையும் அது முதன்மைப்படுத்தியது. மூன்றாவதாக பிராந்திய வல்லரசுகளான சீனாவினதும் இந்தியாவினதும் ஆதரவினை அது தன் பக்கம் வென்றெடுத்திருந்தது எனச் சுட்டிக் காட்டுகிறது அறிக்கை.

2009 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமான யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த வேளையில், புலிகள் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியது. யுத்தநிறுத்தத்தை வேண்டிய அக்கடிதம் மாறாக எந்தவிதமான உத்தரவாங்களையும் தனது தரப்பிலிருந்து வழங்கவில்லை. இலங்கை அரசு அதனை நிராகரித்தது. உலக அரசுகள் புலிகள் ஆயதங்களைக் கிழே வைக்க வேண்டும் எனவும் திட்டமிட்ட வகையில் யுத்தத்தை நிறுத்துவதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் சொன்னது. ஓரு வகையிலான சரணடைவு என்பதன் கீழ் நோர்வேயும்,அமெரிக்காவும் இதற்கான திட்டவரைவில் இறங்கியது.

1.தலைவர்கள் தவிர புலிகளின் உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். 2. புலிகள் தமது ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க வேண்டும். 3. புலிகளின் உறுப்பினர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையிமோ சரணடைய வேண்டும். 4. சம்பந்தப்பட்டவர்கள் பொதுமக்களின் நலன்காப்பதிலும் அரசியல் தீர்வு காண்பதிலும் உதவி செய்வார்கள்.

இதனையடுத்து திருகோணமலைக்குக் கலங்களை அனுப்பும் ஏற்பாட்டிலும் அமெரிக்க அரசு இறங்கியது. ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் யுத்தமுனைக்குச் செல்வது என்றும், அமெரிக்காவும் இந்தியாவும் முன்னின்று இதனைக் கண்காணிப்பது என்றும் ஏற்பாடாகி, இலங்கை அரசிடம் பேசப்பட்ட்போது, இலங்கை அரசு சரணடைவதற்கு ஒப்பும்போலத் தோன்றியது என்றும், ஆனால் ஐக்கிய நாடுகள் இதில் தலையிடுவதை இலங்கை ராணுவம் விரும்புமா எனச் சொல்லமுடியாது என்பதாக இலங்கை அரசு கருதியதாக அறிக்கை பதிவு செய்கிறது.

மேறகத்திய, நோர்வே, அமெரிக்க அரசுகளின் ஏற்பாட்டின் படி சரணடையும் புலிகளின் தலைவர்கள் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் அவர்களது பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படும் என்பதாகவும் இருந்தது. ஆனால் பின்னால் இலங்கை அரசினால் மலேசியாவில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன் கூற்றின்படி 25 முதல் 50 வரையிலான புலிகளின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வேறு நாடொன்றுக்குச் செல்வது சாத்தியம் என புலிகள் எதிர்பாரத்ததாகவும் தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இதனை முழுமையாக நிராகரித்தார் என்பதனை அறிக்கை பதிவு செய்கிறது. சம்பந்தப்பட்ட ராஜதந்திரிகள் இதனைப் பற்றிக் குறிப்பிடுறபோது புலிகள் ஒரு கனவுலகத்தில் வாழ்கிறார்கள் என்று சொன்னதாக அறிக்கை குறிப்பிடுகிறது. புலிகள் மாயமந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் போலத் தோன்றுகிறது. முன்னைய பல்வேறு சந்தர்ப்பங்களில் இம்மாதிரியிலான மாயங்கள் ஏற்பட்டு பிரபாகரன் தப்பியது போல, இம்முறையும் நடக்கும் என புலிகளின் தலைமை கருதியது ன நோர்வேஜிய ராஜதந்திரி இது குறித்துச் சொன்னதாக அறிக்கை பதிவு செய்கிறது.

தமது பொறி இறுகிக் கொண்டு போகும் நிலையில் புலிகள் சரணடைவதை இலங்கை அரசு விரும்பவில்லை. மேற்கல்லாத அரசுகள் இப்பிரச்சினையை முடியுங்கள் எனச் சொல்லின. 2009 ஏப்ரல் 19 பிரெஞ்சு வெளியறவு அமைச்சர் குச்னர், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட் ஆகியோர் இலங்கை வருகிறார்கள். இலங்கை அரசு தனது நிலையை மாற்ற மறுத்துவிடுகிறது. மே 9 ஆம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தொடர்பு கொள்ளும் இந்திய உள்துறையமைச்சர் பா.சிதம்பரம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஒரு வரைவின் அடிப்படையில் ஆயதங்களைக் கீழே வைக்க புலிகள் ஓப்புக்கொள்ள வேண்டும் என்பதனைச் சொல்கிறார். அன்றைய நிலையில் தேர்தலில் பிஜேபி வெல்லும் எனவும், இலங்கை அரசை போர்நிறுத்தத்திற்கு பிஜேபி வலியுறுத்தும் எனவும், ஆகவே சிதம்பரத்தின் திட்டம் ஒரு காங்கிரஸ் தந்திரம் எனவும், அதனை நிராகரிக்குமாறும் பிரபாகரனிடம் சொல்கிறார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வை.கோபாலசாமி என்பதனை அறிக்கை குறிப்பிடுகிறது.

2009 மே 18-19 தேதிகளுக்கிடையிலான இரவில் இறுதி நேரத்தில் தாம் சரணடைவதான விருப்பத்தை நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் நோர்வேஜியர்களையும் பிரித்தானியா, அமெரிக்க தூதரகங்களையும், கொழும்புத் தமிழ் அரசியல்வாதியான சந்திரா நேருவையும் தொடர்பு கொண்டு சொல்கிறார்கள். ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சேவுடன் பேசி அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைவது எனவும் ஏற்பாடாகிறது. தொலைபேசி உரையாடல் முடிந்து சில மணிநேரங்களில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்தி வருகிறது என்கிறது அறிக்கை. தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை, போன்றவர்களும் கொல்லப்பட்டதாக அறிக்கை பதிவு செய்கிறது. 2009 மே 18 ஆம் திகதி ஒரு நாளில் மட்டும் 1000-4000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அறிக்கை பதிவு செய்கிறது.

ராஜீவ்காந்தியின் மரணத்தில் தாம் தொடர்புபடவில்லை என முன்னர் தன்னிடம் தெரிவித்த புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுத்துறைத் தலைவர் பொட்டம்மானும் பின்னாளில் தமது தொடர்பை ஒப்புக்கொண்டு தன்னிடம் தெரிவித்ததாக அன்டன் பாலசிங்கம் தன்னிடம் தெரிவித்ததாக எரிக் சொல்ஹைம் சொன்ன விடயத்தையும் இந்த அறிக்கை பதிவு செய்கிறது. இலங்கை அரசிடமும் புலிகளிடமும் முனைப்புப் பெற்றிருந்த போர்ச்சிந்தனையில், ஏலவே ஓரநிலைக்குத் தள்ளப்பட்ட(marginalised) அன்டன் பாலசிங்கத்தின் மரணம் என்பது பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகப்பெரும் பின்னடைவாக இருந்தது என்பதனையும் இந்த அறிக்கை பதிவு செய்கிறது.

No comments:

Post a Comment