Monday, October 3, 2011

போலீஸ் காவலில் தொண்டர் மரணம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி-ஒத்திவைப்பு; சபாநாயகரை நோக்கி டேபிள் பேன் வீச்சு!

Monday, October 03, 2011
காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர் செய்யது முகமது யூசுப் (55). கடந்த 29-ந் தேதி போலீஸ் காவலில் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் இன்று அமளியில் ஈடுபட்டனர். சபை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக முன்னணி (பி.டி.பி.) உறுப்பினர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். பதிலுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டதால் சபையில் கூச்சல் குழப்பமாக இருந்தது.

தேசிய மாநாட்டு கட்சி தொண்டர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக முதல்-மந்திரி உமர் அப்துல்லா பதவி விலக வேண் டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மெகபூபா கோரிக்கை விடுத்தார். சபாநாயகர் முகமது அக்பர் இது தொடர்பாக விவாதிக்க இயலாது என்றார்.

இதனால் அவருக்கும் மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி உறுப்பினர் மவுலவி இப்திகார் உசேனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் உணர்ச்சி வேகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மீது தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர் இப்திகார் உசேன் அன்சாரி டேபிள் பேனை எடுத்து சபாநாயகரை நோக்கி வீச முயன்றார். அருகே இருந்த சபை காவலர்கள் அதை தடுத்து விட்டனர். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அமளி காரணமாக சபையை 30 நிமிட நேரத்துக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார். பின்னர் சபாநாயகர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் மெகபூபா கூறும்போது தேசிய மாநாட்டு கட்சி தொண்டர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக முதல்-மந்திரி உமர் அப்துல்லா மவுனம் சாதிக்கிறார் போலீஸ் காவலில் இறந்தது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் இதுகுறித்து முதல் மந்திரி உமர் அப்துல்லா கூறுகையில், இவ்வழக்கை நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், நீதிபதி முன் பேசுவதற்கு தனக்கு துளியும் தயக்கமில்லை எனவும் கூறினார்.

No comments:

Post a Comment