Pages

Wednesday, August 24, 2011

லிபியாவில் புரட்சி படையிடம் ஆட்சியை இழந்துள்ள கடாபி தலைநகர் திரிபோலியில் ஒளிந்திருக்கக்கூடும்-அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது!

Wednesday, August 24, 2011
வாஷிங்டன் : லிபியாவில் புரட்சி படையிடம் ஆட்சியை இழந்துள்ள முன்னாள் அதிபர் கடாபி, தலைநகர் திரிபோலியில் ஒளிந்திருக்கக்கூடும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் கடாபி. வயது 69. இளைஞர்கள் தலைமையில் அமைந்த புரட்சி படை கடந்த பிப்ரவரியில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கியது. அதை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது.

புரட்சி படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்தார் அவர். இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு ராணுவம் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியை ஞாயிறன்று சுற்றி வளைத்த புரட்சி படையினர் அதிபர் மாளிகையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு பதுங்கியிருந்த கடாபியின் 3 மகன்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், கடாபியின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரியவில்லை.

கடாபி வெளிநாடு தப்பியிருக்கலாம் என்றும், பதுங்கு குழியில் லிபியாவிலேயே பதுங்கியிருக்கலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவர் லிபியாவை விட்டு தப்பியிருக்க முடியாது என்றும் திரிபோலியில் பதுங்கியிருக்கக் கூடும் என்றும் வாஷிங்டனில் பென்டகன் செய்தித் தொடர்பாளர் டேவ் லாபன் நேற்று தெரிவித்தார். அவரை தேடும் பணியில் புரட்சி படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment