Pages

Wednesday, August 24, 2011

அன்னா ஹசாரேக்கு சினிமாக்காரர்கள் ஆதரவு போராட்டம் : நடிகர், நடிகைகள் கண்டுகொள்ளவில்லை!

Wednesday, August 24, 2011
சென்னை:அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவில்லை.வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகத்தின் சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தைத் துவங்கி வைத்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார் பேசும் போது, ""இந்தியாவில் ஊழலை ஒழிக்க, அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்திற்கு, எங்களின் இந்தப் போராட்டமும் பலம் சேர்ப்பதாக அமைய வேண்டும். நேற்று முன்தினம் தான், இப்போராட்டம் குறித்து அறிவித்தோம் என்றாலும், அழைப்பையேற்று பலர் கலந்து கொண்டதற்கு சந்தோஷப்படுகிறோம் என்றார்.

திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேசும் போது, ""அன்னா ஹசாரேக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவதால், வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவது உறுதி. தமிழகத்தில் அன்னா ஹசாரேக்கு, இன்னும் ஆதரவுக் குரல் கூடுதலாக ஒலிக்க வேண்டும் என்றார்.

நடிகர் பார்த்திபன் பேசும் போது, ""அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு, இந்தியா முழுவதும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, அரசும், அரசியல்வாதிகளும் எந்தத் தவறும் செய்யக்கூடாது. மீறி தவறு செய்தால், மக்கள் தண்டிக்காமல் விட மாட்டார்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தும் என்றார்.

உண்ணாவிரதத்தில், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஆனந்தா சுரேஷ், அன்பாலயா பிரபாகரன், ஏ.ஆர்.முருகதாஸ், ஆதிராஜன், நடிகர் அர்ஜுன், நடிகை ரோகிணி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் திரையுலகில், முக்கிய சங்கங்களான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றில், ஒவ்வொரு சங்கத்திற்குள்ளும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே, "நீயா, நானா என்ற பாரபட்ச நிலை நிலவி வருவதால், இப்போராட்டத்தில் இச்சங்கங்களைச் சேர்ந்த முக்கியமானவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.

ஒரு சில நடிகர், நடிகைகளைத் தவிர, மற்ற முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

No comments:

Post a Comment