Sunday, August 21, 2011
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். திருப்பதியில் நடந்த கட்சி தொடக்க விழாவில் பேசிய அவர் அன்புதான் லட்சியம் சேவைதான் மார்க்கம் என்று அறிவித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 18 இடங்களில் அவரது கட்சி வென்றது. இந்த நிலையில் தனது கட்சியை காங்கிரசில் இணைக்கப்போவதாக சிரஞ்சீவி அறிவித்தார். சோனியா முன்னிலையில் டெல்லியில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் கூறினார். ஆனால் சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்று விட்டதால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த எளிய நிகழ்ச்சியில் ராகுல் காந்தி முன்னிலையில் சிரஞ்சீவி காங்கிரசில் முறைப்படி இணைந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
எனது லட்சியத்தை நிறைவேற்ற இன்னொரு சக்தி தேவைப்பட்டது. அதனால் தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரசில் இருந்து எனது சேவையை தொடருவேன். இன்று முதல் நான் காங்கிரஸ்காரன். என் வாழ்நாள் முழுவதும் காங்கிரசில் இருப்பேன்.
காங்கிரசில் சேர்ந்தது கடவுள் கொடுத்த சிறப்பு வாய்ப்பாக கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவம். ராஜீவ் காந்தி பிறந்த நாளில் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது. எதிர்காலத்தில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்று காங்கிரசை வளர்க்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழலை எதிர்க்க போவதாக கூறிய நீங்கள் ஊழலில் சிக்கி தவிக்கும் காங்கிரசில் இணைந்து இருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு கடவுள் போல் ஊழலும் எங்கும் உள்ளது என்று மழுப்பலாக சிரஞ்சீவி பதில் அளித்தார்.
No comments:
Post a Comment