Sunday, April 27, 2014

இந்தியத் துணைத்தூதரகம் கொண்டாடிய ‘இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம்’ மற்றும் ‘சர்வதேச மாணவர்கள் தினம்!

Sunday, April 27, 2014
இலங்கை::இந்தியத் துணைத்தூதரகமானது நவம்பர் 2010ல் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. இது முதல் தடவையாக இவ்வருடம் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினத்தை 26 ஏப்ரல் 2014 அன்று தனது தூதரக வளாகத்தில் கொண்டாடியது. இதில் இந்தியாவின் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பயின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த 20 பழைய மாணவர்கள் பங்குபற்றினர்.
 
2. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது, 50 வருடங்களுக்கு முன்னர் 1964ம் ஆண்டு மனிதவள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவித்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. அத்திட்டத்தின் மிக முக்கிய பங்காளியாகவும், கொழும்புத்திட்ட புலமைப்பரிசில் திட்டத்தினதும் பங்காளியாகவும் இலங்கை அமைகிறது.
 
சர்வதேச மாணவர்கள் தினமானது, சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. அவரே கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவையின் ஸ்தாபக தலைவராவார்.
 
3. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டமானது, வேறுபட்ட துறைகளான தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி, நிதி, தொடர்பாடல், தொலையுணர்தல் போன்றவற்றில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சியையும் வழங்குகிறது.
 
புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பிரயாணம், பயிற்சி, தங்குமிடம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்திய அரசால்
 
பொறுப்பேற்கப்படுகிறது. அத்துடன் மாதாந்தம் வாழ்க்கைச் செலவுப்படியாக இந்திய ரூபா 25,000, புத்தக கொள்வனவுப்படி இந்திய ரூபா 5000, வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்களுக்கான கல்விச் சுற்றுலா செலவு மற்றும் மருத்துவ செலவு என்பன வழங்கப்படுகின்றன.
 
இந்தியாவிலுள்ள 48 முன்னணி பயிற்சி நிறுவனங்கள் 280 குறுகிய, நடுத்தர, நீண்ட கால கற்கைகளை வழங்குகின்றன. இந்திய அரசானது வருடத்தில் 161 ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 8,280 அதிகாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது.
 
4. தற்போது இலங்கையின் அரசதுறைப் பணியாளர்கள் 190 பேருக்கு இந்தியா பயிற்சி வசதிகளை வருடாந்தம் வழங்குகிறது. அவற்றில் வடமாகாணத்தக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண அதிகாரிகளின் பயிற்சிப் பங்கேற்பு ஊக்கமளிப்பதாகவுள்ளது.
2
012-2013 காலப்பகுதியில் 4 இடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், 2013-2014 காலப்பகுதியில் 10 இடங்கள் பெறப்பட்டுள்ளன.
 
5. இதேபோல கல்வித்துறையில் 270 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவருக்கு இந்தியாவில் கற்கவென வழங்கப்படும். அதேவேளை, 350 புலமைப்பரிசுகள் இலங்கை தோட்டத்தொழிலாளர் கல்வி நிதியத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
 
இலங்கையில் கற்கும் 150 மாணவருக்கு மஹாத்மா காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 150 மாணவருக்கு புலமைப்பரிசு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தமது க.பொ.த. உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு வருடத்தில் 48,000 இலங்கை ரூபாவைப் பெறுவர்.
 
6. விழாவில் பேசும்போது துணைத்தூதர் திரு வெ.மகாலிங்கம் அவர்கள், நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், வடக்கு மாகாண அலுவலர்களின் பயிற்சிப்பங்கேற்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட அனைத்துப் பயிற்சி இடங்களும் இந்தவருடம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
 
7. ஒரு சில பழைய மாணவர்கள் இந்திய நிறுவனங்களில் தாம் கற்ற மற்றும் பெற்ற பயிற்சிகளைப்பற்றிய தமது அனுபவத்தையும், அவை பற்றிய இனிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதுடன், தாம் பெற்ற அனுபவமும் தாம் பெற்றுக்கொண்ட விடயங்களும் தாயகத்தில் எவ்வாறு தமது உத்தியோகப்பூர்வக் கடமைகளுக்கு
உதவின எனவும் தெரிவித்தனர்.
 
8. புலமைப் பரிசில்கள் மற்றும் கல்வி உதவிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் இணையத்தளமான http://www.cgijaffna.org எனும் முகவரியில் பார்வையிடலாம்.
 
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றி http://itec.nic.in எனும் முகவரிக்குச் செல்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment