Sunday, April 27, 2014

சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டை மேற்கு நாடுகள் விரும்புகின்றன: விமல் வீரவன்ச!

Sunday, April 27, 2014
இலங்கை::இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் போராட்டம் வெடிக்க வேண்டுமென்று மேற்குலக நாடுகள் விரும்புவதாக ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
முஸ்லிம் சிங்கள முரண்பாடு வெடிப்பதனை மேற்குலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றால் தமிழ் கடும்போக்குவாதிகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து, மற்றுமொரு யுத்தத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
முஸ்லிம் சிங்கள முரண்பாடுகள் வெடித்தால் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவினையும் இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவுவது சாதாரணமானது எனவும், அதனை உடல் ரீதியான மோதல்களின் ஊடாக தீர்க்காது மூளையைப் பயன்படுத்தி திருத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலேயே ஊடகங்கள் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment