Friday,January 25, 2013
இலங்கை::இலங்கையின் தேசிய பாதுகாப்பின் நிமித்தம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுன் பரிந்துரை அடிப்படையில், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரால் ஜெகத் ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பிரிகேடியர் சேனக விக்ரமரத்ன, பிரிகேடியர் அருண வன்னியாராச்சி, பிரிகேடியர் ஜீ வீ ரவிப்பிரிய பிரிகேடியர் சுராஜ் பங்சஜயா மற்றும் லெப்டினன் கேர்னல் பியல் விஜயவர்தன ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இந்த குழுவின் அறிக்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொழில் ரீதியாக போராட்டம் செய்யாவிட்டால், யுத்தம் ஒன்றை வெற்றி கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இலங்கையில் காணப்பட்ட யுத்தத்தை வெற்றிக் கொள்ள முடியாது என்று தெரிவித்த போதிலும், ஒழுக்கம் மற்றும் தொழில்ரீதியான இராணுவத்தினராலேயே அது சாத்தியமடைந்ததாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறின்றேல் எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை தம்மால் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினுள் தாங்கள் ஒழுக்கம் தொடர்பான நடவடிக்கைகளை பேணி வந்ததன் காரணமாகவே இவ்வாறான சிறந்த இராணுவத்தினரை உருவாக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றல், கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வளிப்பு மற்றும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இராணுவம் தற்போது நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், இன்று வழங்கப்பட்ட அறிக்கையில் இராணுவ ஒழுக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் பொருட்டு, புதிய ஒழுக்கவிதிகளை ஏற்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்றிணைந்த இராணுவ குழுமம் ஒன்று தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால், இலங்கையின் இராணுவத்தினருக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பயிற்சி இல்லாதிருந்தமை, பாரிய பின்னடைவாக இருந்தது.
இதனால் அரசாங்கத்தின் மும்மொழில் கொள்கையின் அடிப்படையில், இராணுவத்தினருக்கு வரப்பிரசாதங்களை வழங்கவும் இதில் கோரப்பட்டுள்ளது.
இராணுவ கிராம நிர்வாகத்துக்கு, இராணுவ தலைமையகத்தில் புதிய கண்காணிப்பு குழு ஒன்றை ஆரம்பிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் எந்த சந்தர்ப்பத்திலும், பாதுபாப்பு அமைச்சின் கீழ் நடத்திச் செல்லவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும், பயங்கரவாதம் மற்றும் ஏனைய சூழ்ச்சிக்கார குழுக்கள் தொடர்பில் காவற்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நியமிக்கும் சபையினால் ஆராயப்பட வேண்டும்.
இராணுவத்தினர் பயன்படுத்துகின்ற காணிகள் தொடர்பிலான தகவல்களை ஆராயவும், பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் இராணுவத்துக்குள் உள்வாங்க வேண்டிய காணி தொடர்பிலும் விசேட குழு ஒன்றை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறான காணிகளை சட்ட பூர்வமாக பெற்றுக் கொள்ளவும், அதற்கான சந்தைப் பெறுமதியை வழங்கவும், அல்லது அந்த காணிக்கு நிகரான மாற்று காணிகளை வழங்கவும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது...
புலிகள் மீதான யுத்தம் சரியானதே என இராணுவம் அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இராணுவம் நடத்திய விசாரணை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இராணுவ உயர் அதிகாரிகளினால் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது.
சர்வதேச சமூகத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான இராணுவ விசாரணை அறிக்கை இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறைமையுடைய நாடு என்ற ரீதியில் பௌதீக ஒருமைப்பாட்டையும், தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை சட்டவிரோதமாகக் கருத முடியாது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சகலவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி பொது மக்களை படையினர் மீட்டெடுத்தாகத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக 20 மில்லியன் மக்கள் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் படையினர் மேற்கொண்ட யுத்தம் நியாயமானது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் பொதுமக்கள் இழப்புக்களை சூன்யமாக பேணுவதற்கும், மனித உரிமைகளை நிலைநாட்டவும் படையினர் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment