Friday,January 25, 2013
சிகாகோ::160க்கும் அதிகமானோரை பலி கொண்ட மும்பை பயங்கரவாத சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு அமெரிக்க கோர்ட் 35 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டேவிட் கோல்மேன் ஹெட்லி மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவன். 52 வயதான ஹெட்லி, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்து பல்வேறு தீவிரவாத பயிற்சிகளை பெற்றவன். 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அவன், 2009ம் ஆண்டு எப்.பி.ஐ., போலீசால் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். அவன் மீது மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கான சதி திட்டம் தீட்டியது, லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு ஆயுதங்களை 'சப்ளை' செய்தது, மும்பை தாக்குதலின் போது அமெரிக்கர்களை குறிவைத்து கொன்றது உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் சிகாகோ கோர்ட்டில் சுமத்தப்பட்டிருந்தன.
ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு அமெரிக்காவிடம் பல முறை கேட்டுக் கொண்டது. ஆனால், ஹெட்லி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தமக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்றும், இந்தியா, பாகிஸ்தான் அல்லது டென்மார்க் அரசிடம் ஒப்படைக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டான். அவ்வாறு செய்வதாக உறுதி அளித்தால் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினான். இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் ஹெட்லி வழக்கின் தீர்ப்பினை சிகாகோ நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி டேவிட் லெய்னன்வெப்பர் அறிவித்தார். அதில் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தீர்ப்பு தினம் என்பதால் சிகாகோ நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தீர்ப்பு வழங்குவதில் 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. மேலும், மொபைல், ஐபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்ததால், பத்திரிகையாளர்கள் சிரமத்துக்கு ஆளாயினர்.

No comments:
Post a Comment