Thursday, November 1, 2012

மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வலி.கிழக்கு பிரதேச சபை கட்டிடம் திறப்பு!

Thursday, November 01, 2012
இலங்கை::மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வலி.கிழக்கு பிரதேச சபையின் கட்டிடத் தொகுதியை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.

வலி.கிழக்கு அச்சுவேலி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியே இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் 26 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் வலி.கிழக்குப் பிரதேச சபைக்கான உபஅலுவலகம், நூலகம் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேற்படி புதிய கட்டிடங்களை அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்ததுடன், கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜெயகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் உரையாற்றும் போது, மக்களுக்கான சேவைகளை திறம்பட மேற்கொள்ளப்படும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வழிகாட்டல்களுக்கு அமைவாக வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் சேவையை நோக்காகக் கொண்டு இப்புதிய கட்டிடத் தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில், ஜனாதிபதியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களதும் வழிகாட்டலுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமைத்துவத்துடனும் மேலும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களும் உரையாற்றினார்.

இதன்போது வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், உள்ள+ராட்சி ஆணையாளர் ஜெகூ, வலி.கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தா சோமராஜ்,  ஈ.பி.டி.பி. அமைப்பாளர் ஐங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்...

No comments:

Post a Comment