Saturday, October 1, 2011

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இம் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்!

Saturday, October 01, 2011
இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இம் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுநலவாய அமைப்பின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் அமிதாவ் பனர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு உதவ பொதுநலவாய அமைப்பு முன்வந்துள்ளதாகவும் பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அது பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்படலாம் என அமிதாவ் பனர்ஜி தெரிவித்துள்ளார்.

2013 ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடைபெற்றால் தாம் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்படுமா எனக் கேட்டபோது.

2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானம் 2009 ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பேர்த்தில் நடைபெறவுள்ள மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இவ்விவகாரம் இடம்பெறவில்லை என அவர் பதிலளித்தார்.

இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் மறுசீரமைப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், தற்போதைய உலக பொருளாதார நெருக்கடியின் தாக்கம் ஆகியன உட்பட பல விவகாரங்கள் பேர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக பொதுநலவாய உதவிச் செயலாளர் ஸ்டீவ் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் அதிகாரிகள் மட்ட மாநாடு ஒக்டோபர் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 26,27 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் மட்ட மாநாடும் தலைவர்களின் உச்சிமாநாடு ஒக்டோபர் 28, 29 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment